கருத்து (கருத்தெழுதல்)
பா வானதி வேதா.
இலங்காதிலகம் (டென்மார்க்)
விழுமியோரின்
கருத்துப் பட்டாசு
எழுத்துக்கு ஒரு பண்டிகை.
அழுத்தும் நல்லாணிக் கருத்து
அழுகச் செய்யும் பொய்களை
விழும் கருத்துமழையால் எழுத்தாளன்
செழுமையுறுவான் - வேர் பரவும்.
மெழுகும் நற் கருத்து
உழுது மனம் பண்படுத்தும்.
அழுக்காறு நற் கருத்தை
எழுத என்றும் அனுமதிக்காது.
எழுது வழுது பிழைகளை.
வழுநிலை எழுதினால் தோழமை
பழுதாகும் என்ற பயமேன்!
எழுது கோல் தூரிகையால்
ஒழுகும் கருத்து வண்ணம்
பழுதற்றால் நன்மை பயக்கும்.
எழும் புகழும் கருத்துகளும்
முழுதாக்கும் வரலாற்று மாளிகையை.
விழுதாகும் கருத்துப் பூக்கள்
தொழும் நிலையையும் உருவாக்கும்.
தழுவும் உயர்வுக் கருத்து
முழுதான உண்மையில் எழட்டும்.
இழுத்து நீள்வது நேர்மையே.
இழுக்கு மழுப்பும் கருத்து!.
( வழுது – பொய். வழுநிலை – சொல் தவறாக வரும் தன்மை.
மழுப்பும் - தாமதப் படுத்தல், ஏமாற்றுதல்)
|