மகளெனும்
கடல்..
(மகள்
பற்றிய
கவிதை)
வித்யாசாகர்
1
நானும் மகளும் கடலுக்குப்
போகிறோம்,
முன்னே ஓடியவள்
கரையில் தடுக்கி சடாரென
தண்ணீருள் விழுகிறாள்,
அலை மூடிக்கொள்கிறது
மகளைத் தேடுகிறேன் எங்கும் தண்ணீரே தெரிகிறது
மகளைக் காணோம்
மகளையெங்கே காணவில்லையே
ஐயோ மகளென்று பதறி
ஓடி கடலில் குதிக்கிறேன்;
மகள் வேறொரு புறத்திலிருந்து ஏறி
அப்பா ஹே.. என்று சிரிக்கிறாள்,
கையை ஆட்டி ஆட்டி ஏமாத்திட்டேனே என்கிறாள்,
தண்ணீரில் கூட வியர்த்தது
எனக்கு
உடம்பெல்லாம் பதறுகிறது..
அவள் சிரிக்கிறாள் சிரிக்கிறாள்
அப்படிச் சிரிக்கிறாள்
என்னம்மா என்கிறேன்
ஐயோ அப்பா அப்பா என்கிறாள்
பயந்தே போனேன்மா என்றுச்
சொல்லவில்லை
அவளதைக் கேட்கவுமில்லை
அவளுக்கு சிரிப்பே சோறு
சிரிப்பிற்கே விளையாட்டு
எங்கே காணினும்
கடலெங்கும் அவள் சிரிப்பு
அவள் சிரிப்பு
என் உயிரெங்கும் அவள் சிரிப்பு..
அவள் சிரிப்பு..
சிரித்து சிரித்து சிரித்து
அவளுள் இருக்கும் நான்
மெல்ல மெல்ல அடங்கியதற்கும்
அவளோடு சேர்ந்து நான்
வாய்விட்டு சிரித்ததற்கும்
இந்த கடலின்று சாட்சி..
-----------------------------------
2
அப்பா
மகள்
இரண்டுமுறை எழுதவேண்டாம் போல்
ஒரேயொருமுறை எழுதுகிறேன்
கடல்..
----------------------------------
3
அப்பா நான் தண்ணீரில் இறங்கி
விளையாடப் போகிறேன்
இதலாம் பிடிங்க என்று
முதலில் ஒன்றை கொடுத்தாள்
வாங்கிக்கொண்டேன்
சரி இந்தாங்க
இதையும் பிடித்துக்கொள்ளுங்க ளென்று
இரண்டாவது கைக்குட்டையையும்
பணப்பையையும் கொடுத்தாள்
வாங்கி வைத்துக்கொண்டேன்
மூன்றாவதாய் மீண்டும் ஓடிவந்து
சரிங்கப்பா இந்தாங்க இதையும்
வைத்துக்கொள்ளுங்கள் என்றாள்
வாங்கியதும்
அப்பா பிரிக்காதீங்க என்றாள்
சரிம்மா என்றுச் சொல்லிவிட்டு
பிரித்துப் பார்த்தேன்
அது ஏதோ
புத்தகத்தில் வந்த எனது
பழைய புகைப்படம் போல இருந்தது..
கேள்வியோடு திரும்பி
அவளைப் பார்க்கிறேன்
வானத்திற்கும் பூமிக்குமாய் அவளே பெரிதாகத்
தெரிந்தாள்..
--------------------------------
4
பட்டு உனக்கு
அப்பா பிடிக்குமா என்றேன்
ம்ம் பிடிக்கு மென்றால்
எவ்வளவு பிடிக்கும் என்றேன்
ரொம்ப பிடிக்கு மென்றாள்
எவ்வளோ இந்த கடலளவு
பிடிக்குமா என்றேன்
ம்ம் இதுபோல் இன்னும்
நிறையக் கடலினளவு பிடிக்குமென்றாள்
அவளுக்கு மனசு
கடலைத் தாண்டி யிருந்தது
எனக்கு அவள்தான் கரையாக இருந்தாள்..
|