காற்றுள்ள போதே ....

சுசீந்திரன்


சாலச் சிறந்த சிப்பிக்குள்
சதைப் பிண்டங்களின்
தடுமாற்ற தேரோட்டம்

ஆடுவன நாட்டியத்தில்
நிறையவே செய்து
கிடைத்ததை சுருட்டி
களைத்தது நீரோட்டம்.

பனிப்பாறை காகிதங்கள்
அச்சில்லாமல் எழுதியவைகள்
சமுத்திரங்களை அடையாள படுத்தும்.

ஊர்கோடி அய்யனாருக்கு
ஓயாத கோபத்தில்
வஸ்திரங்களும் வியர்த்துப் படுக்கும்

மலைச் சாவுகளை
எழுத்துப் பிழையில் கண்டு
மன்னிக்கும் தகுதியற்ற
என்னிடத்து சிறுமூளையும்-
வானவாராயர்களின்
வாய்ப் பந்தலில்
வடிந்து ஒழிகிய பொய்க் காய்களை
பதம் பிரித்தும்-
அவருக்காய் மிக்க அலையும்.

மலையகத் தேன்கூட்டின்
மகரந்த சுகந்தங்கள்
விளம்பரமில்லாமல் அழைத்தும்
கண்மூடிப் போய் விழுந்தேன்
கலங்கிய சாக்கடைக்குள்.

கரையில் நின்று
கண்ணீர் விடுவதாய் நடித்தவர்கள்
நாட்டின் அடுத்த பாதியையும்
கிரையம் செய்தார்கள்.

எங்கோ ஒரு மூலையில் -
கயிற்றுக் கட்டில்
கோவிந்தன் வீட்டு
அரிக்கேன் விளக்கில்
அடி-எண்ணை இல்லாமல்
அந்தக இருட்டாகியது.