கனவுலகம்
கா.ந.கல்யாணசுந்தரம்
தொடுவானத்தை
தரிசிக்க
இனிய பயணமாய்
பிறந்த கிராமம்
நோக்கி
ஒற்றுமையின்
சின்னமாய்
அதோ அந்த
அந்தி வானத்து
பறவைகள்
நெஞ்சில் நீங்கா
நிழலோவியமாய்
எரிக்கரைமீது
வீடு திரும்பும்
உழவனின் குடும்பம்
இன்னும்
தலைச்சுமைகளை
மட்டுமே
இறக்கி வைக்கின்றனர்
என புலம்பும்
சுமைதாங்கி
மஞ்சள் வெயிலில்
சாதி மத பேதமின்றி
விளையாடி
களைப்புறும்
சிறுவர் சிறுமியர்
தமிழர்தம் கலாச்சார
அனுபவங்களை
பகிர்ந்துகொள்ளும்
பாரம்பரிய
வீட்டுத் திண்ணைகள்
அறுவடை நாட்களில்
போரடித்து தூற்றும்
நெல்மணி களஞ்சியத்து
கதாநாயகனாய்
களத்துமேட்டு காளைகள்
எப்பொழுதும்
விட்டுக்கொடுக்கும்
பண்புதனை வளர்க்கும்
வயல்காட்டு
ஒற்றையடிப் பாதைகள்
பசுமை நினைவுகளை
பொய்யாக்கி
இவையாவும் கனவுலகத்து
கதையாகிப்போனது
பேருந்திலிருந்து
இறங்கி நடக்கையில் ....!
|