குவலயத்தின் முதல்விழா பொங்கல்

பாவலர் கருமலைத்தமிழாழன்
 




செழிப்பள்ளித் தருகின்ற இயற்கைத் தாய்க்குச்
     செலுத்துகின்ற நன்றிவிழா செம்மைப் பொங்கல்
விழிதிறந்து உழைக்கவைத்து விளைச்சல் நல்கும்
     விரிகதிரை வணங்குகின்ற வியர்வைப் பொங்கல்
வழிவழியாய்த் துணைநின்று வளத்தைக் கூட்டி
     வாழ்வளிக்கும் மாடுகளைப் போற்றும் பொங்கல்
அழியாத தமிழ்ப்பண்பை அகிலத் திற்கே
     அழைத்துரைக்கும் தைமகளை வாழ்த்தும் பொங்கல் !

ஊருக்கு நெல்மணிகள் குவித்த ளிக்கும்
     உழவர்தம் உழைப்புதனை மதிக்கும் பொங்கல்
போருக்கு சளைக்காத காளை யர்கள்
     பொருதுகாளை அடக்குகின்ற வீரப் பொங்கல்
நேருக்கு நேர்பார்த்த களவுப் பெண்ணை
    நேர்மையுடன் மணக்கின்ற கற்புப் பொங்கல்
யாருக்கும் இல்லையென்று சொல்லி டாமல்
     யாசிக்கும் முன்கொடுத்து மகிழும் பொங்கல் !

உறவெல்லாம் ஒன்றுசேர்ந்து கரும்பைப் போல
    உள்ளமெல்லாம் இனித்திடவே; மஞ்சள் கொத்தாய்
அறம்விளங்க மாவிலையின் தோர ணத்தால்
    அழகுசெய்து புதுப்பானை இல்லில் வைத்துக்
கறந்தபாலும் அரிசிவெல்லம் கலந்து பொங்கக்
     கவலையெல்லாம் தீர்ந்தின்பம் வந்த தென்றே
குரலெடுத்து வாழ்த்துகின்ற தமிழ்ப்பண் பாட்டைக்
     கூறுகின்ற பெருவிழாதான் தமிழர் பொங்கல் !