சுவையாகும் தைப் பொங்கல்!

கவிஞர் வி. கந்தவனம்

ழிசெய்யும் வகைமாரி தவறாது வையத்தில்
உழவுக்கும் தொழிலுக்கும் உயிர்கள்தம் வாழ்வுக்கும்
பொழிவிக்கும் கதிரவனைப் பொங்கலினால் நன்றிசொல்லித்
தொழவைக்குந் தைமுதல்நாள் தொல்லைகளைத் துடைக்கும்நாள்!

பொங்கிடுவோம் தைப்பொங்கல் புவிதன்னில் நல்லமைதி
தங்கிடவே தமிழர்களும் தமிழீழம் கண்டிடவே
எங்குமுள்ள ஏழைமக்கள் ஏற்றவளம் எய்திடவே
பொங்கிடுவோம் அன்புப்பால் புதுவாழ்வு பொலிந்திடவே!

எங்களுக்குச்; செங்கதிர்போல் இலங்குபவர் பிரபாகரர்
தங்கமகன் வீரத்துக்கும் தலைவணங்கிப் பொங்கிடுவோம்
சிங்கவிழிப் பாலசிங்கம் தென்றல்மொழித் தமிழ்ச்செல்வன்
வெங்களத்தில் வீழ்ந்தபுகழ் வேங்கைகட்கும் பொங்கிடுவோம்!

வீரமின்றி வெற்றியில்லை வெற்றியின்றி ஈழமில்லை
ஊருமில்லை உறவுமில்லை என்பவருக் கொன்றுமில்லை
தூரமென்ன நேரமென்ன சொந்தமண்ணுக் குதவிசெய்ய
ஈரநெஞ்சம் ஒன்றுபோதும் என்றுசொல்லிப் பொங்கிடுவோம்!

கலக்கமின்றிக் காலமெல்லாம் கன்னித்தமிழ் ஆட்சிசெய்யத்
துலக்கமுடன் தமிழீழம் தோன்றிவரத் துணிந்தொன்றாய்
விலைக்கரிய விடுதலையை விற்பவரை எச்சரிக்கும்
புலிக்கொடியை ஏற்றிநல்ல புத்தெழுச்சிப் பொங்கல்செய்வோம்!

சமர்தூண்டும் சதிமாள சமாதான மதியாள
அமைவாக அகிலத்தை அறந்தாங்க அன்போங்க
தமிழ்பொங்கத் தமிழ்மக்கள் தன்மானந் தான்பொங்கச்
சுமைநீக்கும் சுதந்திரத்தில் சுவையாகுந் தைப்பொங்கல் -

பொங்கிடுவோம் புலர்பொழுதில் புத்தரிசி பசும்பயறு
பங்கமிலாப் பசுப்பாலில் பதமாகக் கலந்தினிய
செங்கரும்புச் சர்க்கரையும் சேர்த்துழவுத் தொழில்வாழச்
செங்கதிரோன் தனைப்போற்றிச் செய்ந்நன்றி பொங்கிடுவோம்!


கவிஞர் வி.கந்தவனம்
vinayagar28@yahoo.com