பொங்கலோ பொங்கல்

தீவகம் வே.இராசலிங்கம
 


னிநிலம் மலர்கள் பொங்கும்
     காற்றொடுந் தென்றல் பொங்கும்!
வனிதைமண் வார்ப்புப் பொங்கும்
     வைகறைக் கதிர்கள் பொங்கும்
இனியசெந் தமிழே பொங்கும்
    ஏரொடுந் தோள்கள் பொங்கும்!
மனிதமென் றுலவுங் கோவில்
    மனையெலாம் இன்பம் பொங்கும்!

மனையவள் வதனம் தோப்பு
    மதனிடும்; முத்தின் ஏஞ்சல்!
சுனையெனுஞ் செந்தேன் ஊற்றுச்
    சுழிதருங் கவிதை ஊஞ்சல்!
அனையமின் னதிர்வுக் கண்கள்
    ஆக்கிடும் அமுதப் பொங்கல!;
வினையது தமிழ்த்து வத்தின்
    வித்தது! வேரின் பொங்கல்!

மழலையர் துள்ளும் பொங்கல்
    மத்தாப்பு சிரிக்கும் பொங்கல!;
இழையபொன் நகையாள் செவ்வாய்
    இதழ்தரும் வெண்மைப் பொங்கல்!
மழைவயல், சூடும் செந்நெல்
     மனைதரும் மரபுப் பொங்கல்!
தழைபலா மாவும் வாழை
     தகைதருங் கனியின்; பொங்கல்!

பொங்கலோ பொங்கல் என்போம்!
     புத்தகம் நூலின் நூர்ப்பு
எங்குமே பொங்கக் காண்போம்!
     ஏர்வயல் வளங்கள் சிந்தும்
தங்குபே ரில்லங்; காண்போம்!
     தமிழொடும் சிலிர்த்து மாந்தும்
திங்களும் சூரி யர்க்கும்
    செப்புவோம் நன்றிப் பொங்கல்!

எங்களுர் சரவ ணைப்பொன்
     ஏர்தரும் மருதக் குன்றம்
இங்கிதப் பைம்பூண் காவில்
     இயல்தரும் திருநாள் எண்ணித்
தங்கிடுங் கனவு கண்டேன்!
     தாரணிப் புலவு மண்ணில்
பொங்கிடுந் திருநாள் என்றோ?
    பூக்குநாள் எந்நாள் அம்மா!

 

vela.rajalingam@gmail.com