அன்றே சொன்னான் ஐயன்
வள்ளுவன்
தர்ஷினி
முற்போக்குவாதி
என்று முன்னிலைப்படுத்த
முன்னோரையெல்லாம் முட்டாளாக்கினர்
பகுத்தறிவுவாதி என்று பறைசாற்றிக்கொள்ள
பழசுகள் என்று பரிகாசம் செய்தனர்
அறிவாளியாகக் காட்ட விரும்பினோர்
ஆய்வு செய்வதற்கு அஞ்சியொதுங்கினர்
பூனை ஒன்று குறுக்கே போனது
சேனைத் தலைவன் திரும்புக என்றான்
குடிமனை இருக்கும் பகுதி ஆதலால்
வேறு பாதையில் விரைக என்றானவன்
பூனைச் சகுனம் பிறந்தது இப்படி
எதுவா னாலும் எவர்சொன் னாலும்
அதுவா உண்மை ஆராய்ந்தறிக
அன்றே சொன்னான் ஐயன் வள்ளுவன்
ஆதலால் சொன்னேன் அன்பர்காள் கேண்மின்
நமது முன்னோர்கள் நாலும் தெரிந்தவர்
வீணே எதுவும் விளம்பியதில்லை
மூட்டிய தீயுடன் மூலிகைக் கூட்டினை
கட்டிய வீட்டினுள் சுற்றி இழுப்பது
தேளும் பாம்பும் தீய சிலந்தியும்
வாழும் வீட்டினுள் குடிபுகா வண்ணமே
பூமியும் நிலவும் சூரியன் தானும்
சந்திர அச்செனும் நேர்கோட்டில் வருகையில்
பூமியின் நிழலும் சந்திரன் நிழலும்
ஒன்றின்மீ தொன்று விழுவதனாலே
சந்திர சூரிய கிரகணம் தோன்றும்
சந்திர அச்சின் எதிர்முனை இரண்டையே
இராகுவும் கேதுவும் என்றனர் முன்னோர்
பள்ளிக் கூடமே போகாதவர்க்குச்
சொல்லித் தரவா முடியும் இதனை
இராகுவும் கேதுவும் பாம்புகள் அல்ல
எங்கே பாம்பு எப்போவரும் என்று
இப்போ நாமும் சொல்ல முடியுமா
கிரகணம் தோன்றும் கால நேரத்தை
இன்றே நாமும் கணித்துக் கூறுவோம்
என்றே கூறினர் எழுதியும் வைத்தனர்
எமது முன்னோர்கள் மூடர்கள் அல்லர்
எதுவா னாலும் எவர்சொன் னாலும்
அதுவா உண்மை ஆராய்ந்தறிக
அன்றே சொன்னான் ஐயன் வள்ளுவன்
ஆதலால் சொன்னேன் அன்பர்காள் கேண்மின்
|