நான் ஏன் பிறந்தேன்

சுசீந்திரன்

காடுகளுக்கு அப்பால்
ஓர் தின ஞாயிற்றின் உதயப் பொழுதில்
ஊசிக்குளிர் சேவித்த யாகத்தில்
பிரசவித்த பிரணவ மூலங்களில்
நான் வாழ்கிறேன்

யாருக்காக இந்த ஜீவன்
இன்னும் பறக்காமல்
எலும்பு வீட்டுக்குள்ளும்
இறுக்கிய சதை சுவருக்குள்ளும்
காலைக் கசடுகளில்
கிடந்து புரண்டு....
கிறங்கி வீழ்கிறேன்.

வார்த்தைக்கு வார்த்தை தேடி
வியர்த்த தருணங்களில்
ஆர்த்த பெருமல்லிக் கூட்டங்களின்
அந்தச் சூரியன் படாத பிரதேசத்து
அங்கத்து வாசத்தில்
அடி தொலைந்து மாள்கிறேன்.

பூவுக்குள் பூவந்து
புறப்பாடுகளை தடை செய்து
என் ஞானப் பயணங்களை
ஒரு கேணி உறைக்குள் போட்டு புதைத்து
புண்ணியச் சாலைகளை
மிதித்து ஆள்கிறேன்.

நிச்சயத்த மரணத்தில்
நீட்சிமை பெற்று
மாண்புமிகு இல்லாது மறந்து போகுமதில்
சிக்குண்டு சிதற வேண்டாம்
வரும் தலைமுறைகள் பேச
மறுபடியும் நான் பிறந்து
மரணிக்க வேண்டும்
மல்லிகைகள் இல்லாத தேசத்தில்.


சுசீந்திரன்:9843702642