ஒற்றைவரி
எஸ்.பாயிஸா அலி, கிண்ணியா, இலங்கை.
வேலைநாட்களின் மிச்சசொச்ச வேலைகளையும்
வாரிச்சுருட்டிக்கொண்டே வந்துசேருகிறது
விடுமுறையென்ற பெயரில்
அதிபளுவோடு கூடிய இருவேலைநாட்கள்.
விடிவெள்ளி உதிரா
விடிகாலை உறைபனியில்
முற்றிப்பழுத்தே உதிர்ந்து கிடக்கும்
முற்றத்து மாந்தளிர் பெருக்குவதில் தொடங்கி
முன்னிரவில் படுக்கை விரிப்பை
சரிசெய்வதோடு முடிந்து விடுகிறதா வேலைகள்?
'இரவைப் படைத்ததே ஓய்வுக்காகத்தான்' என
அவனே சொல்லியுமென்ன?
அதன்பிறகுங்கூட ஒரே வேலைதான்....!
களைப்பாய் சோர்ந்து வீழுவது
மனசுங்கூடத்தான்.
ஒருகணம்......ஒரேயொருகணம்.....
உயிராய் நீயுருகுமுன் அன்னையாய்
இல்லையேல்......
மிகவுமாய் செல்லங்கொஞ்சுமுன்
முதல்மகளாய்....எனையேந்திக் கொள்ளேனுன்
ஒற்றை வரியிலாவது.
அச்சிறு கணத்திலேனும்,
அள்ளியணைத்தே மிகஆறுதலாய்
தலைகோதிவிடுமவ் வொற்றை வரியினையே
பூமடியாக்கி விழிமூடித் தூங்கட்டுமே
அதிருமென் ஆன்மா
உறங்காத அதன் முன்னிரவுகளுக்குமாய்!
sfmali@kinniyans.net
|