எல்லோரும்
விரும்பிடுவோம் ! -
எம்.ஜெயராமசர்மா - மெல்பேண்
மழையின்
பொறுமையினால்
மாவெள்ளம் தான்குறையும்
மாபூமி பொறுமையினால்
மக்களெலாம் வாழுகிறார்
இரவின் பொறுமையினால்
இன்பமெலாம் விளைகிறது
இறைவனது பொறுமையினால்
இயக்கமே நடக்கிறதே !
தாயின் பொறுமையினால்
தான்குழந்தை வளர்கிறது
தந்தையின் பொறுமையினால்
தான்நிமிர்ந்து நிற்கிறது
குருவின் பொறுமையினால்
குணம்பெற்று உயர்கிறது
குவலயத்தில் பொறுமையது
கொடையாக விளங்குதன்றோ !
தருமனது பொறுமையினால்
சன்மார்க்கம் உயர்ந்ததுவே
சகுனியது பொறையின்னமை
சதியாகக் குவிந்ததுவே
இமயமாய் பாண்டவரை
எல்லோரும் மதிப்பதற்கு
ஏற்றதொரு வலிமைதந்த
இலக்கணமே பொறுமையன்றோ !
காந்தியது பொறுமையினால்
கண்டுநின்றார் சுதந்திரத்தை
சாந்தியுடன் வாழ்வதற்கும்
தத்துவமே பொறுமையன்றோ
நீதிநேர்மை அத்தனையும்
நெறிதவறி போவற்கு
பொறுமைபற்றி உணராதார்
பொறுப்புத்தான் காரணமே !
தலைவர்க்கும் பொறுமையில்லை
தொண்டர்க்கும் பொறுமையில்லை
தலைநிமிர்ந்த ஆணவத்தின்
தாழ்பணிந்தே நின்கின்றார்
நிலைகுலைந்து பலபோயும்
நினைத்துமே பார்க்காமல்
நிற்பதற்கு பொறுமையிலா
நிற்பதுவே காரணமே !
புத்தபிரான் பொறுமையும்
புனிதநபி பொறுமையும்
உத்தமராம் யேசுபிரான்
உயர்ந்துநின்ற பொறுமையும்
சத்தியத்தாய் ஈன்றெடுத்த
வள்ளுவரின் பொறுமையும்
இத்தரைக்கு வந்திருந்தும்
ஏன்பொறுமை வரவில்லையோ !
பொறுத்தாரே அரசாள்வார்
பொங்கினார் காடுறைவர்
புவிதனிலே சிறந்தசெல்வம்
பொறுமையே எனவறிவோம்
நினைத்துமே எண்ணிவிட்டால்
நெஞ்சமதில் பொறுமையினை
இருத்தியே வவைத்துவிட
எல்லோரும் விரும்பிடுவோம் !
jeyaramiyer@yahoo.com.au