பிதற்றுவது முகம்.....

புலமி

டற்கரைக்குச்
செல்கிறீர்கள் 
அலைகளை 
அளவலாவுகிறீர்கள் 
உங்கள் கைவிரல்களில் 
கடைசியாக 
மணற்த் துகள்களாய் 
உதிர்கின்றது கடல்..... 

எப்போதாவது 
விளையாட்டு மைதானங்களைக் 
கடக்கிறீர்கள் 
உங்கள் மீது 
எந்தப் பந்தும் விழப்போவதில்லை 
ஒதுங்கியே தான் 
போகிறது பயம்...... 

குழந்தைகளோடு 
பூங்காவில் மலர்களெனக் 
குலுங்குகிறீர்கள் 
ஊஞ்சலின் முனைகள் 
நான்கோ இரண்டோ 
எதுவானாலும் 
இறுகப் பற்றிக் கொண்டு 
வீடு வந்து சேர்கிறது 
உங்கள் வாகனம்..... 

மழைபெய்யத் துவங்கி 
தேநீரிலோ 
கொட்டைவடிநீரிலோ 
ஆவியாகிவிடுகிறது 
நனைந்தே பழக்கப்பட்ட 
குளிர்க் காற்றில் 
மயிர்க் கூச்செரியும் 
உறவைத் தான் சுடுகிறீர்கள்..... 

அந்த முகத்தில் 
அப்படி இப்படியென 
எல்லா உணர்வுகளையும் 
வெளிப்படுத்திவிட்டு 
ஏதோ ஒரு நாள் பிதற்றுகிறீர்கள் 
கெட்ட கனவு கண்டதாய்..... 

 

ksambigavarshini@gmail.com