சிங்களமொழிக் கவிதை(தக்ஷிலா
ஸ்வர்ணமாலி)
தமிழில்
- எம்.ரிஷான்ஷெரீப்
(சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து
செய்த மனைவியை
கடந்த ஓர் தினம் மீண்டும் எனக்கு காணக் கிடைத்தது)
சனிக்கிழமை
சந்தைக்கு
வந்திருந்தாய் நீ
கைக்குழந்தையை இடுப்பில் சுமந்தபட
நுனிவெடித்த செம்பட்டைக் கூந்தலுக்கு
தேங்காயெண்ணெய் தடவிப் பின்னலிட்டு
அவரை, வெண்டி, நெத்தலி,
பெரிய வெங்காயம், பச்சைமிளகாய்
பை நிறைய வாங்கிக் கொண்டு
நீ செல்கையில்
கூட்டத்தினிடையே நுழைந்து நுழைந்து
உன் பின்னாலேயே வந்தேன் நானும்
நீ காணவில்லை
'பொருட்களை வாங்கும்வரைக்கும்
கைக்குழந்தையை வைத்திருக்கட்டுமா?
இல்லாவிட்டால் காய்கறிப்பையை
தூக்கிக் கொள்ளட்டுமா?
நீ மிகவும் சிரமப்படுகிறாய்' என
கூற வேண்டுமெனத் தோன்றியபோதும்
கூறி விட இயலவில்லை என்னால்
தக்ஷிலா ஸ்வர்ணமாலி
பற்றிய குறிப்பு:
சமூகம்
சார்ந்த விடயங்களை மிகுந்த அவதானிப்புடன் எழுதி வரும் பெண்
கவிஞர். அரச பாடசாலையொன்றில் ஒரு பட்டதாரி ஆசிரியையாகக்
கடமையாற்றி வரும் இவர், மூன்று கவிதைத் தொகுப்புகள், இரண்டு
சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு சிறுவர் இலக்கியப் பிரதிகள்,
இரண்டு சமூகவியல் கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாவல் என
இதுவரையில் பத்து தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார்.
mrishanshareef@gmail.com