உதிர்ந்தவை..

அகிலா


பெரிய தார் சாலையின் நடுவில்
முளைத்திருக்கும் அரளிகளுக்கு
தண்ணீர்விடுகிறார்கள் சிலர் .
இடைவெளி குறைத்து
பறக்கத் தொடங்கியிருந்தன
வண்ணம் இறைத்த வாகனங்கள்.

சாலையின் ஓரமாய்
வெள்ளை வடிந்த வாளி சுமந்து
கோடு இழுக்கிறான் ஒருவன்.

கடிகாரத்தைக் கட்டிக்கொண்டே
வீட்டு வாசலில்
வண்டி உதைக்கிறான்
மற்றொருவன்.

புத்தகப் பையின் கனம் மறந்து
புன்னகை சுமந்து
பள்ளிக்கூட வாசலில்
பிள்ளைகள்

இங்கு
உதிர்ந்து விழுந்த
சிவப்பு பூக்களைப் பற்றி யோசிக்க
எவருக்கும் நேரமில்லை..

 

artahila@gmail.com