எழு தமிழா!

பெருமாங்குப்பம் சா.சம்பத்து




நிலத்தாயின் முதல்மகன் நீ! கலைகள் ஆக்கி
     நிலமெங்கும் வளர்த்தவன் நீ! உன்னை ஆண்டோர்
நலச் செயல்கள் புரிந்தவர்கள் ..! மக்கள் நன்மை
     நுகர்வதையே விழைந்தவர்கள்..! அன்பு ஒன்றே
இலக்கென்று வாழ்ந்தவர்கள்..! இயற்கை போற்றும்
     இயல்கலையில் வல்லவர்கள்..! பிணைந்து வாழும்
உலகுயிர்க்கோர் இடர், பிறரால் நேர்ந்த தென்றால்
     உயிர்மலையும் கடுகவர்க்கு ..! இன்றென்(ன) காட்சி..?

அரசியலில் தூய்மையில்லை..! அறத்தை மீறி
     அனைத்திலுமே கையூட்டு..! ஆட்சி செய்வோர்
அருங்கல்வி பெற்றிருந்தும் மாந்தத் தன்னை
    அடியோடு துறந்துவிட்டார்..! சிறைக்குள் தள்ளும்
பெரும்பணமே அவர்இலக்கு..! இனச்சார்(பு) இல்லாப்
    பெரும்பான்மை மாந்தரையே மீண்டும் மீண்டும்
அரசாள விடுவதுதான் குற்றம்..! மாற்றாய்
    அருந்தமிழ், நல் இளையோரை ஆள வைப்பாய்..!

உனதினத்தை அழிப்பதுதான் வடவர் திட்டம்
    உமதுமொழி சாய்ப்பதில்தான் அவர்க்கு நாட்டம்
உனதுநிலம் பொய்ப்பதற்கே மீத்தேன் சட்டம்
    உணவின்றி உயிர்ப்பும், வாய் மொழியும் ஏது..!
நினைவில், நீ இதைநிறுத்து..! உணர்வுக் கீற்றால்
    நீயிழந்த தெதையும்,(உ)டன் மீட்க, இன்றே
தனித்தியங்கும் நிலைவிலக்கு..! ஒன்றாய்க் கூடித்
    தமிழர்க்குள் மனப்புரட்சி நிகழ்த்திக் காட்டு..!



பெருமாங்குப்பம் சா.சம்பத்து
பேச
:00917868099026