நோகும் நிலங்களும் நெஞ்சடைக்கும் சாபமும்

வித்யாசாகர்

ம்மணத்தில் வேகுதய்யா
உயிரறுந்துப் போகுதய்யா,
நிர்வாணம் நோகுதய்யா
நொடி நொடியாய் வலிக்குதய்யா;

ஆண்டாண்டா உழுத நிலம்
சுடுகாடா மாறுதய்யா,
சேர்த்துவைத்த விதநெல்லு
விசமேறித் தீருதய்யா;

பச்சை வயல் வெடித்ததுமே
பாதி சீவன் செத்துப்போச்சே,
மிச்சப் பானை உடைந்ததுமே
உழவன் உயிர் கேளியாச்சே;

சேறு மிதித்து சோறுபோட்டும்
ஊருசனம் சேரலையே,
ஏறு பிடித்து உழுத கைக்கு
இன்னொரு கை கூடலையே;

வியர்வையில் விளைஞ்ச நெல்
உயிர்குத்தி வருத்துதய்யா,
உழவனா பிறந்ததை - எண்ணி
உயிர்விட துடிக்குதய்யா;

காசுக்கு அலையாத சனம்
பசிபசிச்சு குடி சாயுமா?
காலம் நின்று கொல்கையில்
கைகுட்டையில் மானம் மூடுமா?

வித்த நிலம் ஒட்டு நிலம்
விசம் வாங்கப் பத்தலையே?
உயிர்விட்ட சனங் கூட
வாழ்ந்தொன்றும் சாகலையே?

ஊர் ஊரா பாயுந் தண்ணி
உள் நாக்கை நனைக்கலையே?
கட்டிடமா உயரும் பணம்
ஒத்த மார்பை மூடலையே?

கிளி பறிக்கும் சீட்டாட்டம்
ஒவ்வொன்னா போகுதையா,
உழவன் போன தெருப்பார்த்து – நாளை
வளமுஞ் சேர்ந்துப் போகுமையா;

வெறும்பய ஓலமுன்னு
அரசொதுங்கிப் போகுதே,
அடிமாட்டு விலைவைத்து
நாட்டுமக்கள் பேசுதே;

கோழைகள் இல்லைன்னு
யாருக்குச் சொல்லியழ?
சோம்பேறி இல்லைன்னு
எங்கேபோய் தீ மிதிக்க??

ஒத்த வயிறு பசிக்கு
ஒத்த வார்த்தை பேசலையே;
மொத்தப் பேரும் போகையில
விடாத சாபம் பளித்திடுமோ ??

எம் புள்ள படிச்சிருவான்
பெரிய ஆளா நின்னிடுவான்,
உன் பொழப்பு என்னாகும்
உழவன் உண்டான்னு ஏலம்போடும்;

உலகெல்லாம் பேயாளும்
பசிநெருப்பில் வயிறெரியும்,
ஒத்த நெல்லை தேடித் தேடி
நாளை சுடுகாட்டில் விவசாயம் பிறக்கும்!!

 

vidhyasagar1976@gmail.com