அன்னை
கவிஞர்
அனலை.ஆ.இராசேந்திரம்
தன்னூன்
தன்குருதி
தந்தெம்மைப் படைத்திந்தத்
தரணியிலே தாயாகினாள்
தன்முலைப் பாலுடன்
தண்டமிழ் ஈந்தெமை
இனமானச் சேயாக்கினாள்
என்னிலை வந்தாலும்
ஏற்றிடும் ஒருமனப்
பண்பினை எமக்களித்தாள்
ஏற்றமும் இறக்கமும்
கொண்ட திவ்வுலகென
எடுத்தெடுத் துரைத்துநின்றாள்
பொன்மலர் மனத்தவள்
பொழுதெலாம் தேய்ந்திடும்
சந்தனத் தருவானவள்
பொய்யிலே பொய்யிலை
இப்புவி யாவுமே
தாய்மையின் பரிசிலன்றோ!
அன்னவள் பொன்னடி
அழகாரும் மலர்தூவி
அன்போடு நாம்போற்றுவோம்
அமுதான தமிழாலே
ஆயிரம் கவிகட்டி
அவள் புகழ் தினம்பாடுவோம்!.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்