குவிந்துநிற்கும்
வாழ்வினிலே
எம்.ஜெயராமசர்மா -
மெல்பேண்
கொஞ்சி
மகிழ்வதற்கு
குழந்தைகள் இல்லாமல்
கெஞ்சிநின்று நோன்பிருந்து
கேட்டுநிற்போம் கடவுளிடம்
நெஞ்சறிந்த கருணைக்கடல்
நிறையவே கொடுத்துவிட்டால்
வெஞ்சொல்லால் கடவுளையே
வெடுக்கென்று திட்டிநிற்போம் !
பஞ்சமுடன் இருக்கையிலே
பலகுழந்தை அளித்துநின்றால்
அஞ்சாமல் ஆண்டவனை
அர்ச்சித்தே நின்றிடுவோம்
கொஞ்சமேனும் இரக்கமின்றி
கொடுத்துவிட்டார் கடவுளென
கெஞ்சிநின்ற பலபேரும்
கேள்விகேட்பார் கடவுளையே !
பணம்படைத்த பலபேரைப்
பார்ப்பதற்குப் பிள்ளையில்லை
பிள்ளைதனைப் பார்ப்பதற்குப்
பணமில்லார் பலபேர்கள்
உலகத்தின் விந்தைதனை
உற்றுநோக்கிப் பார்க்கையிலே
படைத்தவனின் நோக்கமதை
விளக்குவார் யாருளரோ !
என்னதான் நிறைந்திருந்தும்
பேர்சொல்ல ஒருபிள்ளை
இல்லையெனும் நிலைவந்தால்
இன்பமங்கே மறைந்துவிடும்
வறுமையொடு இருந்தாலும்
வாசலிலே பிள்ளைவந்து
மழலைமொழி பேசிவிடின்
வாழ்வங்கே விடிந்துவிடும் !
குழலோசை யாழோசை
கொடுத்துவிடும் இன்பத்திலும்
குழந்தையது ஓசையது
கொடுத்துவிடும் பேரின்பம்
அதனாலே குழந்தையினை
ஆண்டவனோ டொப்பித்து
அனைவரும் அனைத்துநின்று
ஆனந்தம் பெறுகின்றோம் !
இல்லறத்தின் பேறாக
எமக்கின்பம் எதுவென்றால்
நம்குழந்தை எமைப்பார்த்து
நாலுவார்த்தை பேசுவதே
பேசுகின்ற மழலையது
பெரும்பேறு எனநினைத்து
பேருவகை கொண்டுவிட்டால்
பேரின்பம் பெருக்கெடுக்கும் !
குழந்தையில்லா வீட்டினிலே
குதூகலம் மறைந்துவிடும்
குழந்தையது சிரித்துவிட்டால்
குதூகலமே நிறைந்துவிடும்
குழந்தைகளைத் தெய்வமாய்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம்
குவலயத்தின் இன்பமெலாம்
குவிந்துநிற்கும் வாழ்வினிலே !
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்