தந்தை தினத்திலே...

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்
 

ந்தை மகற்காய்ச் சலியா துழைக்கும்
       தரங்கத் திறைவன் அறிவீர்
விந்தைச் சரங்கள் விளைக்குங் குருதி
       விருட்சக் கரங்கள் உடனே
சிந்தைக் குகந்த தெளிவும் அறிவும்
      திடமுங் கொடுக்குஞ் சுடரோன்
அந்திப் பொழுதின் அவனோர் வெளிச்சம்
       அகலத் திறக்குங் கதவே!

உழவன் எனினும் வியர்வை பிழிந்து
       உருக்குந் தனத்துக் குரியோன்
கிழவன் எனினும் குருத்துக் கிணையாய்
       கொடுமை பலவுங்; குளிப்போன்
மழைக்குட் பயிரை மதத்துக் கறுத்து
       வளர்த்து எடுக்கும் கலைஞன்!
அழைத்து மகர்க்கு அறியும் புதுநூல்
       அடுத்த வகுப்புக் களிப்பான்!

உண்டி கொடுப்பான் உயிரைக் கொடுத்து
       உணவுக் குழைக்குங் கதிரோன்
வண்டி எருதும் மனையுந் திருத்தி
       வடிகால் சமைக்குங் வயலோன்
நொண்டி எனினும் நுகத்துப் பழுவை
       நொருக்கிச் சுமக்கும் எருதோன்
அண்டும் மனையாள் அயலார் தமக்கும்
       அகலாய் எரிவான் விளக்கே!

சாயம் வரைவான் கடலுங் குளித்துத்
      தரங்கப் படிமத் தகழ்வான்
நேயம் வளருந் தகையாள் களிப்பாள்
       நிலத்துப் புதியோன் வருவான்
நோயும் பிணியும் நிலவுங் குடிலும்
       நிவத்துஞ் சரிதம் உயிர்ப்பாய்
மாயும் வறுமை வளர்;காப் பியங்கள்
       வரையுந் தமிழ்த்தாய் உலகே!


நிவத்தும்-உயர்த்தும்


வாய்ப்பாடு: ஏழு மாச்சீர் உடைய எழுசீர் விருத்தம்
 




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்