சலனம்'' (கவிதைக் குறு நாவல்)

சேவியர் 

சலனம் : 1

நம்ப முடியவில்லை
விரல்களின் இடையே புகை வழிய
இதயம் எரிந்துகொண்டிருந்தது.

திருமணம் என்றதும்
பதுங்கி இருந்த பயவிதைகள்
பட்டென்று முளைத்துவிட்டதாம்

மனசு நிறைய காதலித்தாளே
மவுனமாய் மனசை பரிசளித்தாளே
அவள்
பிறப்பித்தவை எல்லாம் போலிகளா ?
இல்லை அவள் பிம்பம் கூட
அவளுக்கு உரியதில்லையா ?

இதயம்
இரத்தத்தை சுத்திகரிக்க மறந்து
அவளை சுற்றிக் கொண்டிருந்தது.

அவன் இனியன்.
கணிப்பொறிகளோடு
கண்விழித்து யுத்தம் செய்பவன்.
தமிழகத்தின் தலைநகரில்
மென்பொருளோடு முத்தம் செய்பவன்.

அவள்
சுடர்விழி
பெயரில் மட்டுமல்ல
விழிகளிலும் சுடர் மட்டுமே சுற்றிவைத்தவள்.

ஊட்டி மலையில் பறந்து திரியும் ஒரு
நாகரீக நந்தவனம்
சிரிப்பில்
பேச்சில்
சிணுங்கலில்
கவிதைகளுக்கு விளக்கம் சொல்பவள் !

கண்டதும் காதல் என்பதில்
அவனுக்கு உடன்பாடில்லை
விழிகள் காண்பவை உடலை மட்டுமே
கண்டவுடன் மோகம் முளைவிடலாம்
காதல் கிளைவிடாது என்று தர்க்கம் செய்பவன்.

கண்டான்.
அவளை கண்டவுடன்
காதல் பிறந்துவிடவில்லை..
அல்லது
கண்டவுடன் பிறந்ததை
காதல் என்று அவன் கற்பித்துக் கொள்ளவில்லை

கூடுவிட்டு கூடுபாயும் வித்தை
அவளைக் கண்டவுடன்
அவனுக்குக் கைகூடியது.
மனம் ஏனோ சிறகொடிந்த சிட்டுக்குருவியாய்
அவள் நினைவுகளில்
விழுந்து கிடந்தது.

அவளோடு நட்புச் சுவர்கட்ட
அவன்
சீனப் பெருச்சுவரைத்
தாண்டவேண்டி இருந்தது.

பேசினான்.
பேசினாள்.
காதலுக்கும் இசைக்கும் மட்டும்
மொழி ஒரு முட்டுக் கட்டையல்ல.
ரசிக்கும் மனசு போதும்.

அவளுடைய வார்த்தைகளில்
இவன் மனசுக் கூட்டுக்குள்
பச்சைக் கிளிகள்
சிகப்பு அலகுகளால்
அழகியல் பயின்றன !!!

நாட்களின் இடைவேளை
அதிகமாகி
மனசின் இடைவெளி குறுகிப்போன ஒரு
குளிர் மாலைப் பொழுதில்
அவன் மனம் திறந்தான்.

உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது சுடர்.
விளக்க முடியவில்லை
ஆனால்
இது காதலாய் இருக்குமோ எனும்
கவலையும் இருக்கிறது !!!

தவறான பேருந்தில்
தவறாமல் ஏறுகிறேன்.

புத்தகத்தைத் திறந்து வைத்து
உன்னைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.
குளியலறையில் சோப்பு தேவையென்பதை
குறித்துக் கொள்ளவேண்டியிருக்கிறது
குறித்துவைத்துப் பார்த்தேன் ஆனால்
குளிக்கவே மறந்துவிட்டேன்.

விளங்கியது போல இருக்கிறது
ஆனால் விளக்க முடியவில்லை.

நான்
காதல் என்னும் வட்டத்துக்குள்
உன்னைச் சுற்றத்துவங்கிவிட்டேன்
சுடர் விழி.

மனசு தந்தியடிக்க.
வார்த்தைகள்
காந்தத்தின் எதிர்துருவங்களை
வலுக்கட்டாயமாய் இணைக்கும் போது
விலகுவது போல விலக.
சிதறல்களின் கோர்வையாய் சொல்லி
வியர்வையாய் நின்றான்.

சலனம் : 2



அவள் சிரித்தாள்
அப்புறம்,
சொல்லுங்க அவ்வளவுதானா ?

உனக்கும் எனக்கும்
வார்த்தைப் பழக்கம் துவங்கி
வாரங்கள் தான் முடிந்திருக்கிறது
காதல் வந்துவிட்டதென்று கற்பனையா ?

நாம் நண்பர்களாய் இருப்பதில் தான்
என் மனசு நிம்மதிகொள்கிறது.
குழம்பாமல்
மனசை நீரோடையாய் நடக்கவிடுங்கள்.
அது
கடலைச் சேரும் வரை காத்திருங்கள்

நதியைத் தேடி
கடல்
கரைதாண்டி வந்ததாய் சரித்திரமில்லை !!!

உங்களை எனக்குப் பிடிக்கும்.
அது காதலின் முன்னுரையல்ல
நட்பின்
விளக்கவுரை என்பதை
விளங்கிக்கொள்ளுங்கள்.

அமைதியாய் சொன்னாள் சுடர்விழி.

சட்டென்று வந்த சரளமான பதிலில்
சற்றே திகைத்து,
தொடர்ந்தான்

கொஞ்சம்
சிந்தித்துப் பார் சுடர்விழி.

விளக்கைக் கொளுத்த
வினாடிநேரம் போதும்
அது போல் தான் காதலும்.

நட்பு என்பது
காதலின் முகவுரையில்லை
என்று முரண்டுபிடிக்காதே.

நான்
துளியாய் தான் இருந்தேன்
உன்னில் சரிந்தபின்பு தான்
அருவியானேன்.

இப்போது அது விஸ்வரூபம் கொள்கிறது.

நான் விரிந்துவிட்டேன்
இனி
மொட்டுக்குள்
மீண்டும் போக நிர்ப்பந்திக்காதே.
மழையை மேகத்துள்
திணிக்க முயலாதே.

இதயத்துடிப்பு தான்
நீயென்று நினைத்திருந்தேன்
இல்லை
இதயமே நீ தான் என்று
விளங்கிக் கொண்டேன்

என் மூச்சுக்காற்று நீ என்றால்
நான்
வேறுகாற்றை வேண்டியிருப்பேன்
ஆனால் நுரையீரலே நீதான் என்று
என் உடலின்
ஒவ்வொரு அணுக்களும்
ஒத்துக்கொள்கின்றன.

சொல்லிவிட்டேன் என் பிரியமே
பிரிவதற்குப் பிரியப்படாதே.

எப்படி முடிந்தது என்று
அவனால் சொல்லமுடியவில்லை
ஆனால்
சொல்லிவிட்டான்.

சொல்லாத காதல்,
முளைக்காத விதைபோன்றது
சொல்லிவிட்டான்
பயிர் விளையவேண்டுமே எனும் வேண்டுதலோடு,
களை விளைந்துவிடுமோ எனும்
கவலையும் அவனுக்கு !!!

அவன் பார்த்தாள்.
அவள் விழிகள் அகலமானவை.
மரங்கொத்தியின் அலகுபோல அது அவனை
ஆழமாய் கொத்தியது.

வேண்டாம் இனியன்
நீங்க நல்லவங்க
ஒத்துக்கிறேன்
காதல் எல்லாம் வேண்டாம்

சலனம் : 3



ஏன் என்னைப் பிடிக்கலியா ?
மூச்சுக் காற்றை இழுத்துப் பிடித்து
முனகலாய் கேட்டான்

பிடிச்சிருக்கு
ஆனா காதலில்லை !!!

ஏன் ?
காதலிக்கப் பிடிக்கலையா
இல்லை காதலே பிடிக்கலையா ??
நிதானமாய் கேட்டான்

அவள் சொன்னாள்.
ஆழமாய் அவனைப் பார்த்துவிட்டு
அழுத்தமாய் சொன்னாள்.

இல்லை !!!
காதல் எனக்கு பிடிக்கும்.
சொல்லவேண்டாமென்று நினைத்தேன்
சொல்லவைத்துவிட்டீர்கள்.
எனக்கு காதல் முளைத்து
நான்கு ஆண்டுகள் முடிந்துவிட்டது !!!

ஜாலியன் வாலாபாக் படுகொலை
அவன்
இதய செல்கள் மொத்தமும்
வினாடிநேரத்தில்
நடந்துமுடிந்துவிட்டது !!!

தொட்டாச் சிணுங்கி
இதழ் சுருக்குவதுபோல
அவன் முகம் மூடிக்கொண்டது.

நீ.
வாக்கியங்கள்
வார்த்தைகளாகி
எழுத்தில் வந்து முற்றுப் பெற்றது.

ஆமாம்.

ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு
ஓரமாய் நடக்கத்துவங்கினாள் சுடர் விழி.

சலனம் : 4



வானவில் ஒன்று
விரல்களில் விழுந்துவிட்டு
விலகிச்செல்கிறதா ?

அணைதிறந்ததும்
தண்ணீர்த்துளிகள்
அமிலமாகிவிட்டதா ?

சுவாசிக்கும் காற்றுக்குள்
மூச்சடைக்கும் மருந்து
முழுகிவிட்டதா ?

ரோஜா நிமிர்ந்தபோது
நந்தவனத்துக்கு சிரச்சேதமா ?

புரியவில்லை அவனுக்கு.
முட்டை ஒட்டுக்குள் இருக்கிறது
அவன் மனசு.
கொஞ்சம் அசைந்தாலும்
உடைந்துவிடுவதாய் உணர்ந்தான்.

மாலை நேரம் மெதுவாய் நகர
இதயத்துடிப்பு மட்டும்
இரண்டரை மடங்கு அதிகமாகி விட்டது.

சூரியன் விழுவதற்கும் எழுவதற்கும் இடையே
இவ்வளவு இடைவெளியா ?
இதென்ன
இன்றைய இரவு மட்டும் ஆமை ஓட்டுக்குள்
அடங்கிவிட்டதா ?

கடிகாரம் வினாடிகளைக் கடக்க
நிமிட நேரம் எடுத்துக்கொள்கிறதா ?
புரியவில்லை அவனுக்கு.

தூக்கம் என்பது விழிகள் சம்பந்தப்பட்டதில்லை
என்பதை
முதன் முதலாய் உணர்கிறான்.
விழித்தே இருப்பதின் வேதனை அறிகிறான்

காதல் என்ன கல்லூரி ஆசிரியரா ?
புதிதாய் புதிதாய் விளக்கம் தருகிறதே
அவன் மன ஓட்டம்
நயாகராவை விட
வேகமாக ஓடியது.

பிரமிடுகளில்
புதைக்கப் பட்டதுபோல பிரமை.

தூங்கவே இல்லை என்பதை
விடியல் சொன்னபோது தான்
விளங்கிக் கொண்டான்.

வேண்டாம்.
இன்னும் இந்த நினைவுகள்.
அவள் காதலிக்கிறாள்.
காதலிக்கப் படுகிறாள்.

பக்கத்து தோட்டத்தில்
வேர்விட்ட மல்லிகையை
என் தோட்டத்தில்
பூ பூக்க நிர்ப்பந்திக்க முடியாது.

முடிந்தாலும் அது கூடாது.
முடிவெடுத்துவிட்டு மெதுவாய் எழுந்தான்.

தூக்கமில்லாத இரவு.
அது ஒரு துயரம்.

களைப்பு
கண்களையும் கால்களையும் வம்புக்கு இழுக்க
கவனமாய் நடந்தான்.

என்ன இனியன்,
கண்கள் முழுதும் உதட்டுச்சாயம் பூசினாயா?
இல்லை
கண்ணில் கடித்த கொசுவை
அங்கேயே நசுக்கிவிட்டாயா ?
சிரித்தபடி கேட்டாள் சுடர்.

அதெல்லாம் இல்லை.
கடிகாரம் ஓடுவதை
கணக்கெடுத்துக் கொண்டிருந்தேன்.

நேற்று நடந்ததை மறந்துவிடு சுடர்
நீ காதலித்துக்கொண்டிருக்கிறாய் என்பது
எனக்கு தெரிந்திருக்கவில்லை

இழுத்துப் பிடித்து வார்த்தையை நிறுத்தினான்.

என்ன சொல்றீங்க இனியன் ?
காதலி யாய் இருக்கிறேனா ?
யார் சொன்னது ?
புன்னகையைப் படரவிட்டு கேட்டாள்.

நீ தானே
நேற்று கூறினாய்
நான்கு ஆண்டுக்காதல் பற்றி ?

கேட்பதைச் சரியாகக் கேட்கவேண்டும்.

காதல் எனக்கு
அறிமுகமாகி நான்கு ஆண்டு
ஆனதென்று தான் சொன்னேன்.
மூன்று ஆண்டுகளில்
முடிந்துபோனதைச் சொல்லவில்லையே.

சலனம் : 5



மின்னல் ஒன்று மிகச்சரியாக
கண்ணின் கருவிழிக்குள் விழுந்து
கதவடைத்துக் கொண்டது இனியனுக்கு.

அத்தனைக் கதவுகளும்
மொத்தமாய் திறந்ததாய்
இதயத்துக்குள் காற்று நுழைந்தது.

அட என்ன இது
இன்னொருவன் தோல்வியில்
எனக்கு மகிழ்ச்சியா ?

எனக்கே தெரியாமல்
எனக்குள் ஒரு
சுயநலச் சுரங்கம் இருக்கிறதா ?
விழுந்துவிட்டதைச் சொன்னவுடன்
விலாவிற்குள் குளிர் விளைகிறதே ?

என்ன சொல்றே சுடர்.
ஏன் ? என்ன ஆச்சு ?
வார்த்தைகள் நொண்டியடிக்காமல்
நடந்துவந்தன.

கல்லூரி நாட்களில் எனக்கு அறிமுகமானவன் இருதயராஜ்.
பள்ளிக் கூடத்தின் படிதாண்டிவந்த எனக்கு
கல்லூரியின் சாலைகள் கனவுகளை வளர்த்தன.
அது காதலா
இல்லை இனக்கவர்ச்சியா என்று
இனம் காண இன்னும் என்னால் இயலவில்லை.
காதலித்தேன்.
மனசு நிறைய
எனக்காய் அவன் எடுத்துக்கொண்ட அக்கறை
எனக்காய் பூக்களால் பாதை அமைத்த இவனுடைய அன்பு
என் தேவைகளை விழிகளால் கேட்டு
வினாடியில் முடித்த அவன் நேசம்.
இன்னும் ஏதேதோ இருக்கிறது இனியன்.

அப்புறம் என் விலகினாய் ?
மூன்று ஆண்டுக்காதல் என்பது
விளையாட்டல்லவே.

மனசின் செல்கள் கூட
மறுத்திருக்குமே ?

வேலிதாண்டியதாய் காரணம் காட்டி
வெட்டப்பட்டாயா ?
தந்தைக்கும் உனக்கும் இடையே
தலைமுறை இடைவெளி தலை தூக்கியதா ?
சொல் சுடர்
என்ன நடந்தது ?

பழையதைக் கிளறி
மனசைக் கீறிக்கொள்ள எனக்கு விருப்பமில்லை.
பிரேதப் பரிசோதனையில்
காரணங்கள் விளங்கலாம் ஆனால்
பிணக்கிடங்கில் படுத்துக்கிடக்க எனக்கு மனமில்லை.

அவள் உணர்வுகள் புரியவில்லை.
ஆனால் ஆணிவேர் வெட்டப்பட்டுவிட்டது.
மரமும் பட்டுவிட்டது
இனி விறகுகளுக்கிடையே பச்சையம் பிறக்காது
என்பது மட்டும் புரிந்தது அவனுக்கு.

அப்போதைக்கு அது அவனுக்கு
போதுமானதாய் இருந்தது.

சலனம் : 6



சிலநாட்கள் சிறகுகட்டிப் பறந்தபின்
கண்களில் சோகச் சுடர் உமிழ
வினாக்களை விழிகளில் பூசி அமர்ந்திருந்த
அவளிடம் கேட்டான்.

என்ன ஆயிற்று உனக்கு.
உன் கண்களுக்கு இன்று
ஒளியடைப்புப் போராட்டமா ?
இருள் நிறைந்திருக்கிறதே ?

என்ன சொல்வது இனியன்.
இது
காதலித்த என் மனசுக்கு
காதலன் தரும் பரிசு.
உளறி வைத்தாள்.

ஏன் ?
பழையவை மனசில்
பதிந்துவிட்டதா ?
விலகியபின் எண்னங்கள்
விசுவரூபமெடுக்கிறதா ?
கவலை தோய கேட்டான் இனியன்.

இல்லை .
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை இனியன்.

நான் காதலித்தபோது
அவன் என்னைக் காதலித்தான்.
ஆனால்
என் சுதந்திரங்களைச் சிலுவையில் அறைந்தான்.

ஆண்களோடு பேசினால்
அநியாயம் என்றான்.

என் சிறகுகளுக்கு தங்கம் பூசினான்
ஆனால்
என்னைக் கூண்டுக்குள் அடைத்தான்.

அவன் நேசம் எனக்குப் பிடித்திருந்தது
ஆனால்
என் எல்லைகளை சுருக்கிக் கொள்வதில்
எனக்கு உடன்பாடில்லை.

புரியும் நிலையில் அவனில்லை
அது தான்
பிரியும் நிலைக்குக் காரணம்.

நண்பர் கூட்டத்தில் சிரித்தால்
நண்பர்களை மிரட்டினான்.

பேருந்தில் வந்தால்
ஆண்கள் இருப்பார்களென்று
அவன் வண்டியில் தான் அழைத்து வருவான்.

ஆரம்பநாட்களில் பெருமையாய் நினைத்தேன்
நாட்கள் நகர நகர
நந்தவனக் குயிலை
நடைவண்டியில் நடக்கவிடுவதாய்
உணரத்துவங்கினேன்.

வண்ணத்துப் பூச்சியாய் இருக்க பிரியப்பட்டேன்
அவன்
கூண்டுப்புழுவாய் இருக்க மட்டுமே அனுமதித்தான்.

அவனை மாற்ற பிரியப்பட்டு,
சிரமப்பட்டு
இறகுகளின் இறுக்கத்தை இழந்தேன்.

பிறகு
என் வட்டத்தைக் காப்பாற்ற
அவன் வட்டத்திலிருந்து வெளியே வந்தேன்.

இப்போது
தொலைபேசித் தொல்லை தொடர்கிறது.

மணியடித்தாலே
மாதாவை வேண்ட ஆரம்பித்துவிடுகிறேன்.
முதலிரண்டு வார்த்தைக்குள்
முழுவதுமாய் வியர்த்து விடுகிறேன்.

கவலைகளை வேதனைகளை இயலாமையை
இறக்கி வைத்துவிட்டு
மௌனத்தை இதழ்களில் பூட்டி அமர்ந்தாள்.

சலனம் : 7



சில நேரம் மௌனம் அதிகம் பேசும்
இன்றும் அப்படித்தான்.
நிமிடங்கள் விரைவாய் கரைய,
அவளருகில் அமர்ந்து
மௌனத்தைக் கேட்டு
மௌனமாய் இருந்தான்.

அன்று முதல்
அவனுக்கென்று எதுவும் தனியாய் இல்லை.
பேசுவதிலேயே பாதி நாள் கரையும்,
இ-மெயிலில் மீதிநாள் கரையும்.

இன்னொரு நாள் இனியன் பேசினான் மறுபடியும்.
காதலை !
இன்னும் காதலிப்பதாய்.

அவள் மௌனமானாள்
கடந்த காலத்தில் நான் இழந்தது ஏராளம் இனியன்.
சுதந்திரம்,
நிம்மதி,
பெற்றோரிடம் எனக்கிருந்த நம்பிக்கை !
இனி
அவர்கள் விழிகளில் என் விரல்கள்
கவலைச் சாயம் பூசாது.

அவர்கள் சொன்னால்
முதுமக்கள் தாழிக்குள்
முடங்கிவிடவும் எனக்கு சம்மதமே.

உங்களை எனக்கு ரொம்ம பிடிக்கும்.
ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

ஆனால்
அம்மாவுக்கு உங்களைப் பிடிக்குமென்று
நம்பிக்கையில்லை.

அவர்கள்
கலாச்சாரக் குடையுடன் நடப்பவர்கள்
நீங்கள் கிராமிய இசையில் நனைபவர்.

அவர்கள் பார்வையின் அழகை அங்கீகரிப்பவர்கள்
சாப்பிடுவதில்,
நடப்பதில்,
உட்காருவதில்,
ஏன் நகங்களில் கூட நாகரீகம் பார்ப்பவர்கள்.

அவர்களுக்கு உங்களைப் பிடித்திருந்தால்
நான் அதிஷ்டசாலி.
சொல்லிவிட்டு நிமிர்ந்தாள்

அவன் மனதுக்குள் திடீர் அலை ஒன்று
திசை மாறி வீசியது
எண்ணங்களில்
பல்லாயிரம் புறாக்கள்
படபடவென இறகு அடித்து பறந்தன.

அவ்வளவு தானே
அவர்களே உன்னிடம் சொல்வார்கள்
என்னைப் பற்றி
பொறுத்திரு.

சொல்லிவிட்டு
வானவில்களை விழிகளில் பொருத்தி
கலையும் முன் கண்மூடினான்.

சலனம் : 8



இனியனுக்கு ஒன்றும் புரியவில்லை
சுடரின் அம்மாவோடு உரையாடிய வேளைகளில்
வலுக்கட்டாயமாய் வரவழைத்துக் கொண்ட
மேஜை நாகரீகம்
உடை நாகரீகம்
நடைநாகரீகம் என்று
ஒன்றுவிடாமல் நடித்துவிட்டான்.

காதல் நிஜமானது !
ஆனால் அதை அடைய
எத்தனை நிறம் மாற வேண்டி இருக்கிறது ?

உண்மையைப் பெற
போலிகளோடும்
உறவாட வேண்டியிருக்கிறதே !!

இன்னும் ஒன்றும் தெரியவில்லை.
சுடரைக் காதலிக்கிறேன் என்று
சுற்றிவளைத்துச் சொல்லிவிட்டான்

அம்மாவைப் பற்றி சுடர் சொன்னவற்றை
உள்வாங்கி சரியாகச் நடந்து விட்டேனா ?
இல்லை இல்லை
சரியாக நடித்து விட்டேனா ?

நேராய் நடந்தால் தான்
அம்மாவுக்குப் பிடிக்கும்

சாப்பாட்டு மேஜையில்
வாயசைவில் வாய்தவறியும்
சத்தம் வரக்கூடாது.

உட்காரும் போது
முதுகெலும்பு
வளைந்துவிடக் கூடாது !

நகத்தின் நுனிகள்
விரலை மீறி
மயிரிழை கூட
முன்னேறக்கூடாது !!

அடடா
என் சொந்த முகம்
செல்லுபடியாகாத ஒன்றா ?

பிடித்தபடி வாழ்ந்த வாழ்க்கை
பிறருக்குப் பிடிக்கவில்லை
பிடிக்கவேண்டுமென்பதற்காகவே
சிலநாள் எனக்குப்
பிடிக்காத வாழ்க்கை வாழ்ந்தாகி விட்டது !

இன்னும் ஒன்றும் தெரியவில்லை.

பறித்துக் கொள் என்று
பூ சொன்னபின்னும்
தோட்டக்காரனோடு
மல்லுக்கட்ட வேண்டி இருக்கிறது !

சுடரை இன்னும் காணவில்லை
கவிதைகள் சொல்வது நிஜம் தான்.
காத்திருக்கும் நிமிடங்கள்
நொண்டியடிக்கும்
கேள்விக் குறியோடு காத்திருந்தாலோ
அது நத்தையோட்டுக்குள் தவழுதல் பழகும்

அதோ வருகிறாள் சுடர்
எழுந்துவிட்டான்
இனம் புரியாத ஒரு பதட்டம்..

இதென்ன
நாக்கு கரைந்து கொண்டிருக்கிறதா
உள்ளுக்குள் உமிழ்நீர் ஊற்றெடுக்கிறதே !

நாக்கு நகரமறுத்து
நங்கூரமாக வடிவெடுத்ததாய்
ஒரு பிரமை !

அவள் முகத்தைப் பார்த்தான்.
முகம் மனசின் கண்ணாடி தான்
பெண்களின்
முகம் கூட ஆழமானது !

எதுவும் விளங்கிக் கொள்ள முடியவில்லை !!

சலனம் : 9



சுடர்
அம்மா எப்படி இருக்காங்க ?
ஒரு வார்த்தை கேட்டான்.

அம்மா நலமா இருக்கிறாங்க.
அவனுடைய உணர்வுகளோடு விளையாடுவதற்காகவே
ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள்.

உங்கள் குழுவில் பலர்
வெளிநாடு போவதாய் கேள்விப்பட்டேன்
தூதரக வாசலில் யாராரோ
தூக்கம் தொலைத்தார்களாமே ?
சுடர் கேட்டாள்.

குளியலறைத்தொட்டியில்
தூண்டில் போடுவதுபோல்,
நேரம் வீணாகிக் கொண்டிருப்பதாய்
தோன்றியது அவனுக்கு !

அம்மா
வேற எதாவது சொன்னாங்களா?

ம்..ம் சொன்னாங்க
உங்களுக்கு பிடிக்கிறமாதிரி
ஒரு வார்த்தை சொன்னாங்க.

சொல்லிவிட்டு
பூக்களை உதடுகளில் உட்கார்த்தினாள் சுடர்.

அவன் இழுத்துப் பிடித்திருந்த மூச்சுக் காற்றை
மெதுவாய் வெளிவிட்டபடி கேட்டான்
என்ன சொன்னாங்க.
என்னைப் பிடித்திருப்பதாகவா ?

இல்லை.
வேறு வார்த்தை சொன்னார்கள்.

அதை சொல்வதற்கு முன்
நம் உறவை
ஒரு அவசரப் பரிசோதனை
செய்துகொள்ளலாமென்று நினைக்கிறேன்.

நட்பாய் தொடர்வதில் எனக்கு இன்னும் நிறைய
நம்பிக்கை இருக்கிறது !!

ஐயோ
இமயமலை ஏறும்போது
கால்களில் ஆணி அறையாதே.

நட்பின் எல்லைகளை நான் தாண்டிவிட்டேன்.
கடலிலிருந்து நதியை
வடித்தெடுக்க முடியாது.
அம்மா என்ன சொன்னாங்க.
அது மட்டும் சொல்லிவிடு.
கொஞ்சம் பதட்டம்
கொஞ்சம் கேள்விக்குறியோடு சொல்லி முடித்தான்.

'புடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கோ'
அது தான் அவங்க சொன்ன ஒற்றைவரி.

நான் நம்பவில்லை !!
உங்கள் கண்களில்
உண்மைக்காதல் உருகி வழிந்ததாம்

நாகரீக மணம்
அவர்கள் நாசிக்கு எட்டியதாம்

தெளிவும் அமைதியும் அவர்களுக்கு பிடித்திருந்ததாம்
இதற்கெல்லாம் மேல்
மதமும் ஜாதியும் நமக்கு ஒன்று என்னும்
உண்மைகூட ஒளிந்திருக்கிறது இனியன்.

இனியன் மகிழ்வின் விளிம்பிற்கு வழுக்கினான்.
அவனுடைய கரங்கள்
சட்டென்று சிறகுகளானதாய் உணர்ந்தான்

இரத்த அணுக்களின் அத்தனை துணுக்கிலும்
சந்தோஷ மின்னல் ஒன்று
சத்தமின்றி முத்தமிட்டுக் கொண்டது !!

சுடர்ர்ர்ர்..
உதடுகளோடு சேர்ந்து அவன் கண்களும்
சந்தோஷத்தில் கத்தின !!!

சுடர் சிரித்தாள்

அவன் மெதுவாக
அவளுடைய கரம் பற்றினான்.

தீண்டல் என்பது
உடல் சம்பந்தப் பட்டதில்லை என்பதை
முதன் முதலாய் உணர்ந்தான்.

பல பெண்களின் கரங்களைப் பற்றியிருக்கிறான்
வாழ்த்துச் சொல்லவும்
வரவேற்புச் சொல்லவும்
ஆனால் இப்போது தான் விரல்களின் வழியே
உணர்வுகளின் ஊர்வலத்தை உணர்கிறான்

இரத்தத்தில் புது அணுக்கள் பிறந்ததாய்
அவனைச் சுற்றி
ஆக்சிஜன் மட்டுமே அடைபட்டுக்கிடப்பதாய்.

உலக உருண்டையை உள்ளங்கைக்குள்
சிறைப்பிடித்ததாய்.
ஏதேதோ உணர்வுகள்.

பல தேர்வுகளில் வென்றிருக்கிறான்
ஆனால்
இப்போதுதான்
தேர்வாளர்களையே வென்றதாய் மகிழ்கிறான்.

காதல்
உடலின் எல்லா உணர்வுகளுக்கும் உறவா ?
காதல் வந்தவுடன்
பெருமிதம் அவனுக்கு தலைதூக்கியது !!!

சிரித்துக் கொண்டிருந்தவன்
சட்டென்று நிறுத்தினான்
என் வீட்டில் இன்னும் சொல்லவில்லையே !!!!

சலனம் : 10



வீட்டில் என்ன சொன்னாங்க இனியன் ?
இரண்டு நாட்களுக்கு முன் இனியனுக்கு இருந்த
அதே பரபரப்பு.
இன்று சுடரின் விழிகளில்.

இப்போது தான் ஊரிலிருந்து வருகிறான்
காதலைச் சொல்ல கிராமம் சென்றுவிட்டு

அவன் பேசவில்லை
அவளோடு கொஞ்சம் விளையாடலாம் என்பது அவன் எண்ணம்
சுடர்
என்னை மன்னிச்சுடு
வீட்டில் ஒத்துக்கலை

சட்டென்று கொட்டும் மார்கழி மழைபோல
அவள் விழிகள் வழிந்தன

அதை சற்றும் எதிர்பார்க்காத இனியன்
இதயம் உடைந்தான்
என்ன சுடர்
வீட்டில எல்லோருக்குமே சம்மதம் தான்.
சும்மா ஒரு விளையாட்டுக்காய் . . .

உங்களுக்கு எல்லாமே விளையாட்டுத்தான்.
உங்கள் வீட்டைப்பற்றி எனக்கென்ன தெரியும் ?
காதல் என்பது வேப்பங்காய்
கிராமத்து மனிதருக்கு.
கொஞ்சம் கோபம்,
கொஞ்சம் அழுகையாய் சொல்லிவைத்தாள்.

எனக்கும்
என் அப்பாவுக்கும்
தலைமுறை இடைவெளி பிரச்சனை பிறந்ததே இல்லை.

அவர் கிராமத்தின் வரப்புகளில் நடக்கிறார்
நான் நகரத்தின் சாலைகளில் நடக்கிறேன்.
அவர் சுத்தமான காற்றை சுவாசிக்கிறார்
நான் சுவாசிக்க
டீசல் புகையை வடிகட்ட வேண்டியிருக்கிறது.

ஆனாலும்
நான் இருக்கும் வருடத்தில் தான் அவரும் வாழ்கிறார்.
என் விருப்பங்களை காயவைத்து
அவருடைய எண்ணங்களை வாழவைப்பதில்லை.

எங்கள் கிராமத்தின் தரைகள் கூட
பச்சையம் தயாரிப்பவை
பச்சையோடு அவருக்கு பரிச்சயம் அதிகம்
அதனால் தானோ என்னவோ
நம் காதலுக்கும் அவர் பச்சைக்கொடிதான் காட்டினார்.

இருந்தாலும் அங்கீகாரம் பெற
அம்மாவின் முந்தானையோடு தான் நான்
முன்னேற வேண்டியிருந்தது.
தொடராக சொல்லிவிட்டு சுடரைப் பார்த்தான்.

அவள் கண்களில் இப்போது கண்ணீர் சுவடு இல்லை
சிரித்தாள்.

இந்த காதல் கொஞ்சம் வித்தியாசமானது இனியன்
எதிர்ப்புகள் இல்லாமல்
விதிமுறைகள் விதிக்கப் படாமல்...

நன்றி இனியன்.
என்னுடைய சுதந்திரத்துக்கு
சிறையிடாமல்

சிரிப்பதற்கு மட்டுமே எனைப்பழக்கிய
நீங்கள் தான் என் உலகம்

உங்கள் அறிமுகம் இல்லாவிட்டால்
நான் ஒரு
சிரிப்பு சொர்க்கத்தை சந்தித்திருக்க முடியாது.

சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தாள்
எதிர்பாராத விதமாய் காதலுக்கு
எமன் வருவான் என்பதை இருவருமே அறியவில்லை !!!

சலனம் : 11



போய்த்தான் ஆகவேண்டுமா ?
பொடிப் பொடியாய் உதிர்ந்தபடி
கேட்டாள் சுடர்.

ஆறுவாரங்கள் தானே
அமெரிக்கப் பயணம்.

இரண்டு ஆண்டுகள் என்றதை மறுத்துவிட்டேன்
ஆறுவாரங்கள் என்பது கூட
எனக்கு
ஆறு வருடங்களாய் தான் தோன்றுகிறது.

உன் முகம் பார்க்காத நாட்கள்
எனக்கு விடிந்ததாகவே தெரிவதில்லை.

உன்னோடு பேசவில்லை என்றால்
என் உதடுகள் என்னோடு
கோபித்துக் கொள்கின்றன
நீ அலுவலகத்துக்கு வராத நாட்கள் மட்டும் என்
கடிகாரம் உறைந்துபோகிறது.

நண்பர்கள்
உனக்கு இருக்கிறார்கள் சுடர்
அவர்களோடும் நேரம் செலவிட
உனக்கு இது ஒரு சந்தர்ப்பம்

மறுக்க முடியாத அழைப்பு
ஆனாலும் நீ சொன்னால் மறுத்துவிடுவேன்.
சொல்லிவிட்டு முகம் பார்த்தான்.

மொத்த அலுவலகமும்
அழைப்பு வருமா என்று ஏங்கிக்கொண்டுருக்க
வந்த அழைப்பில்
வாடிப்போயிருந்தான் இனியன்.

இல்லை இனியன்
போய் வாருங்கள்.
பிரிவு காதலை வலுவாக்கும்.
உடல்கள் விலக விலக காதல் அடர்த்தியாகும்.
இது நமக்கு
பரிச்சயமில்லாத பரிசோதனைக்காலம்
பக்குவப் பட பழகிக்கொள்ளலாம்..
ஆறுதல் சொல்லிவிட்டு ஆகாயம் பார்த்தாள்.

அந்த நாள் வந்தது.
பெற்றோர் பெருமைப்பட்டார்கள்.
கிராமத்து சாலைகளில்
அப்பா தகவல் விதைத்துக் கொண்டுருந்தார்.

சகோதரர்களும் சகோதரிகளும்
சந்தோஷப் பட்டார்கள்
உறவினர்ப் படை விமானநிலையத்தை ஆக்ரமித்துக் கொண்டது
ஆனால்
இரண்டு உயிர்கள் மட்டும்
திரும்பி வரும் நாளை மட்டுமே
திரும்பத்திரும்ப நினைத்தார்கள்.

புது உலகம்
சாலைகளைப்
பனிக்குவியலுக்குள் புதைத்து வைத்திருந்தது அமெரிக்கா.

மேகம் கரைவதை மறந்து
உடைந்து விழுந்து கொண்டிருந்தது.

காற்று குளிர்சாதன அறைக்குள் உருவாக்கப்பட்டு
நாட்டுக்குள் அனுப்பப்படுவதுபோல்
உறையவைக்கும் குளிர்.

அவள் இருக்கும் இதயம் தவிர
உடலின் மற்ற பாகங்களின் மொத்த வெப்பத்தையும்
செதுக்கி எடுத்துச் சென்றுவிட்டது
நாட்டுக்குள் விரிக்கப்பட்டிருந்த பனிக்காற்று.

விலக விலக
காதல் வலிதாகும் என்பது உண்மைதான்.
ஆனால் அந்த வலி கொஞ்சம் அதிகமாய் தோன்றியது.

தினமும் காலையில்
தொலைபேசிக்குள் இசைகேட்டான்
இ-மெயிலுக்குள் இதயம் அனுப்பினான்
ஓநீ சுவாசிக்கும் காற்றின் மறுநுனியைத்தான்
நானும் சுவாசிக்கிறேன் ஓ
என்று கவிதை சொன்னான்
சிந்தனைகளில் அவள் மட்டுமே
சிறைபட்டுக் கிடந்தாள்.

அவனுக்கு கொஞ்சம் ஆச்சரியம்
இத்தனை ஆண்டு அம்மாவிடம் இருந்தேன்
அம்மா நினைவுகளையே
இவள் நினைவு ஓரங்கட்டிவிட்டதே
இது தான்
மாமியார் சண்டையின் முதல் படியா ?
சுடருக்குப் பிடிக்காததைச் செய்ததில்லை
அவளுக்காய் செய்ததெல்லாம்
இவனுக்கும் பிடித்திருந்தது.

அம்மாவுக்குப் பிடித்ததைச் செய்ததாய்
அவனுக்கு நினைவில்லை
ஆனால் அவன் செய்ததெல்லாம் அம்மாவுக்குப் பிடித்திருந்தது
தாய்ப்பாசம் கொஞ்சம் வித்தியாசமானதுதான்.

நினைவுகளில் மூழ்கி மூழ்கி மூச்சடைத்துப் போனதாய்
மூச்சுவிட மறந்து யோசித்துக் கொண்டிருந்ததாய்
நாள்காட்டியை தினமும் நானூறுமுறை பார்ப்பதாய்
வார்த்தைக்கு வார்த்தை நேசத்தைக்கொட்டினாள் சுடர்

இவன் எதைச் செய்தாலும்
அவளுக்குப் பிடிக்குமா என்று யோசித்துச் செய்தான்.
நண்பர்கள் நூறுமுறை சொல்லியும் கேட்கவில்லை
இப்போது
புகை பிடிப்பவர்களைப்
பார்ப்பது கூட இல்லை.
அவளுக்காகச் செய்வதில் ஆனந்தம் இருந்தது !!!

அதோ இதோ என்று ஆறுவாரங்கள் முடிந்தே விட்டது.
இருவர் செல்களிலும்
சிறகுமுளைக்கத் துவங்கியது.

ஆறு வாரங்கள் பொறுத்தாகிவிட்டது
இந்த அரை வாரம் நகர மறுக்கிறதே

சலனம் : 12



அதுவும் நகர்ந்தது
விமான இருக்கையில்
இருக்கை வார்ப்பட்டையோடு
அவள் நினைவுகளியும் சேர்த்துக் கட்டினான்.

அவளுக்காக வாங்கியிருப்பவற்றை கொடுக்கும் போது
அவள் முகத்தைப் பார்க்கவேண்டும்.
ஒரு மழலைப் புன்னகை நிரந்தரமாய் நிறைந்திருக்கும்
அவள் உதடுகளைப் பார்க்கவேண்டும்
சிரிக்க மட்டுமே தெரிந்த அவள்
கண்களைப் பார்க்கவேண்டும்.

திடீரென்று விமானம் நடுங்க ஆரம்பித்தது
ஆகாயக் குளிர் அதன்
இறக்கைகளை உறைய வைத்துவிட்டதா ?
இல்லை !!!
ஆகாய அழுத்தம் அதன் போக்கை
சிதைக்கப் பார்க்கிறதாம்

ஒரே ஒருமுறை அவள் முகத்தைப் பார்க்கவேண்டும் எனும்
ஒரு சுயநல விண்ணப்பத்தோடு
கண்மூடினான்.
விண்ணப்பம் அங்கீகரிக்கப் பட்டது
பயணத்தின் சாலைகளில் பழுதுகள் நீங்கின

இரவின் கடைசித்துளியில் வீடுசேர்ந்து
விடியலின் முதல் துளியில்
அவள் வீட்டுக் கதவு தட்டினான்.

தூக்கம் தொலைத்து விழித்திருந்தாளா ?
வினாடியில் கதவுதிறக்க
தாமரை மலர் நடந்து வந்தது

இனியன்ன்ன்.
பாதங்களில் சக்கரம் கட்டியதாய்
பாய்ந்துவந்தவள் கட்டிக்கொண்டாள்.

அடடா
இதயப் பந்துக்குள் திடீர் தீ பாய்கிறதே.
விலக மறுத்து விரல்கள் கோர்த்து
உதடுகள் தேடி முத்தமிட்டாள்.

முத்தம்..
அது இரத்தத்தை உறையவும் வைக்கும்
உருகவும் வைக்கவும்.

இதயப் பள்ளத்தில்
வெள்ளைப் பூக்களை விளையவைக்கும்

இலக்கணப் பிழை செய்து
இலக்கியத்தை ஜெயிக்கும்

இது அதரங்களில் அரங்கேறும்
அகழ்வாராட்சி

முத்தமிடாதவன் மனசுக்குள்
மூங்கில்கள் குழலாவதில்லை

முத்தம் அது ஒரு இசை
கொடுத்தாலும் பெற்றாலும் ஒரே சுவை !!!
முத்தம் அது ஒரு கவிதை
எழுதுவதிலும் இன்பம் படிப்பதிலும் இன்பம்.

இருதிசை வீசிய
தென்றல்கள் இரண்டு
சந்தித்துக் கொண்ட சந்தோஷம் அவர்களுக்கு.

மீண்டும் நாட்கள் ராக்கெட் பயணத்தை துவங்கின
மாதங்கள் உருண்டபின்
சம்பிரதாய சடங்குகள்.
இருவீட்டிலும் விருந்து.

திருமண நாளை சீக்கிரம் பாருங்கள்.
என் வயதுப் பெண்கள்
குழந்தைக்குப் பாலூட்டுகிறார்கள்
நீங்கள் இன்னும்
என்னைத் தாலாட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.
இசையாய் சொன்னாள்

சலனம் : 13



அவன் குரலின் மீது அவளுக்கு தீராத தாகம்.
அவன் பாடல் கேட்டு
அவள் தூங்கியிருக்கிறாள்

இன்னொருநாள்
அவன் குரல் கேட்க தூக்கத்தைத் துறந்திருக்கிறாள்.

காதலில் மட்டுமே
எதிர் துருவங்கள் ஒருபுள்ளியில் உற்பத்தியாகும்
பஞ்சும் நெருப்பும் இணைந்தே வளரும்

அந்த நாள் வந்தே விட்டது.
குமரிமண்ணின் கிராமம் தேடி
நாகரீக மக்கள் நடந்தார்கள்.

இனியனுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை.
நூலில்லாப் பட்டம் போல பறந்தான்
ரோஜாவின்
இதழ்கள் பொறுக்கி புத்தகம் செய்து
மகரந்தம் கொண்டு கவிதை எழுதினான்.

சம்பிரதாயப் பேச்சுக்கள்
சங்கடமின்றி முடிந்தன.
திருமண நாளை முடிவுசெய்வது மட்டுமே
பேசப் பட்ட ஒரே பொருள் !!

காதல் மட்டுமே
சமுதாயக் கீறல்களை ஒட்டவைக்கும்
வரதட்சணைக் கவலைகளை விலக வைக்கும்.

திருமண நாள் நிச்சயமாகிவிட்டது.
இனியனின் எல்லைகள் வளர்ந்தன.
அவன் மகிழ்ச்சி
பசிபிக் கடல்போல ஆழமாய் அவதாரமெடுத்தது.

நண்பர்களிடம் சொன்னான்
திருமண மண்டபம் தேடினான்
உறவினர்களிடம் மகிழ்ச்சியை தெளித்தான்

எல்லாம் முடிந்து
கவலை என்பதை மறந்து போன ஒரு காலைப் பொழுதில்
அவன்
சுடரைத் தேடி சென்னை வந்தான்.

வழியில் எதிர்பட்ட நெருங்கிய நண்பன்
வித்யாசாகரிடம் விளக்கமாய் சொல்லமறுத்து
இருவரியில் சுருக்கமாய் சொல்லிவிட்டு
சுடரைத் தேடி ஓடினான்.

சுடர்ர்.
சந்தோசம் தானே ?
பொத்திவைத்த சந்தோஷச் சிறகுகள்
திடீரென வானம் கண்ட மகிழ்ச்சியில்
விரிந்தன அவனுக்கு.

அப்போது தான் அந்த எதிர்பாராத பதில்
அவளிடமிருந்து முளைத்தது

எனக்கு கல்யாணம் வேண்டாம் இனியன்
திருமணத்தை நினைத்தாலே
பயமாக இருக்கிறது !!!

சலனம் : 14



நம்ப முடியவில்லை
விரல்களின் இடையே புகை வழிய
இதயம் எரிந்துகொண்டிருந்தது .
திருமணம் என்றதும்
பதுங்கி இருந்த பய விதைகள்
பட்டென்று முளைத்துவிட்டதாம்

முதலில் அதை பொருட்படுத்தவில்லை !!!

உங்களைப் பார்க்க அம்மா வந்தபோது
உங்கள் வீட்டில் யாரும்
நாகரீக உடை அணியவில்லையாமே ?
அம்மா சொன்னாங்க

அதிச்சியாய் இருந்தது இனியனுக்கு.
சுடர்
நீ என்னைக் காதலிக்கிறாயா
இல்லை
என் மேல் பூசப் பட்ட சாயத்தைக் காதலிக்கிறாயா ?

அர்த்தங்களை விட
அடையாளங்கள் தான்
அதிகமாய் விலை போகிறதா ?

என் கிராம மக்கள்
சேரியில் சரிந்திருக்கும்
சாராயக் கடைகளில்
வாழ்க்கையைத் தேடுவார்கள்

அவர்களுக்கு
மதுக்கோப்பை வாங்க பணமும் இருப்பதில்லை
நாகரீக உணவருந்த நேரமும் இருப்பதில்லை

அவர்கள்
வயல்களில் வாழ்க்கையைத் தொலைப்பதால் தான்
நாம்
கணிப்பொறியில் கவிதை எழுத முடிகிறது.

உன்னை நான் கிராமத்து மண்ணில்
நாற்று நடச் சொல்லப் போவதில்லை

நீயும் நானும் நகரத்து ஓரத்தில்
மாத வாடகை கட்டிதான்
வாழ்க்கை நடத்தப் போகிறோம்

அவர்கள் நாகரீகமாக இல்லாதது தான்
உன் காதல் உருமாறக் காரணமா ?
கொஞ்சம் அதிர்ச்சி தொனிக்க கேட்டான்.

ஐயோ
அதெல்லாம் ஒன்றும் இல்லை
சத்தியமாக நான் அதை
குறையாகக் கருதவில்லை

அப்படியென்றால்
பெற்றோரைப் பிரிவதில் மனசு கனக்கிறதா ?
நண்பர்களை பிரிவோம் என்று
உள்மனது கவலைகொள்கிறதா ?
சுதந்திரச் சிறகுகள் வெட்டப்படுமோ
எனும் நிழல் யுத்தமா ?
குடும்ப வாழ்க்கை என்றதும்
பொறுப்புக்களை சுமக்க பயப்படுகிறாயா ??

அடுக்கடுக்காய் கேட்ட
அத்தனை கேள்விகளுக்கும்
இல்லை என்னும் பதில் மட்டுமே
அவளிடமிருந்து வந்தது.

புரியவில்லை
நண்பர்களிடம் ஓடினான்

இது திருமணம் என்றதும் மனதுக்குள் தோன்றும்
மனோதத்துவ மாற்றமா ?
அவள் காதல் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது
அவள் மாற்றம் எனக்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லையே
புலம்பினான்.

நண்பா,
உனக்குத் தான் எங்கள் காதலின் ஆழம் புரியும்
காதல் விதையாக இருந்த நாளிலிருந்து
நீ
எங்களுடன் இருக்கிறாய்

நான் என் உயிரையும் அவளையும்
இரண்டாகப் பார்க்கவில்லை
இரண்டறக் கலந்தபின் இல்லை என்கிறாள்
காரணம் கேள்

வித்யா சிரித்தான்
அவளுக்கு பயமா ?
தைரியத்தின் பிம்பமாய் தான்
நான் அவளைப் பார்க்கிறேன்.

உறுதியான உள்ளம் அவளுக்கு
நம்பிக்கை தான் வாழ்க்கையின் துடிப்பு
அதை நிறுத்திவிடாதே
நிச்சயமாக ஒத்துக் கொள்வாள்

சலனம் : 15



தெரியவில்லை எனக்கு
அவள் அம்மாவிடம் பேசினேன்
ஆச்சரியப் பட்டார்கள்.
அப்பாவிடம் பேசினேன் அதிர்ச்சி அடைந்தார்கள்.
காரணம் புரியாமல் கலங்குகிறேன்.
அழுகை இதயத்தை
அடைக்க பேசினான் இனியன்.

கவலைப் படாதே
உன் காதலின் ஆழம் எனக்குத் தெரியும்
உண்மைக்காதல் உடைபடாது
உனக்காக நான் எதுவேண்டுமானாலும் செய்கிறேன்
கரம் பற்றி நம்பிக்கை விதைத்தான் வித்யா.

மீண்டும் மீண்டும் பேசினான்
என்னைச் சோதிக்காதே சுடர்
காரணம் இல்லாமல்
முடிவெடுப்பவளல்ல நீ.
உனக்கு கல்யாணமே பிடிக்கவில்லையா
இல்லை
என்னைப் பிடிக்கவில்லையா ?

உனக்கு இன்று இருக்கும்
எந்த ஒரு சுதந்திரமும் அடிமைப்படாது
நம்பிக்கைகொள் என் பிரியமே
என் மீதும்
நம் வாழ்க்கையின் மீதும்
அடைபட்ட மனதோடு பேசினான் இனியன்.

உங்களை எனக்கு பிடிக்கும்
ஆனால்
திருமணம் செய்யுமளவுக்கு பிடிக்கவில்லை

என்ன சொல்கிறாய் சுடர்
நீ தான் காதலிப்பதாய் சொன்னாய்
திருமணம் செய்ய சம்மதம் என்றாய்
வீட்டில் பேச துரிதப் படுத்தினாய்
ஏன் ?
திட்டமிட்டே என்னை பழிவாங்கவா ?
இல்லை
என் உணர்வுகளின் வலிமையை
உரசிப் பார்க்கிறாயா ?

மனிதனின்
தாங்கும் சக்தியை பரிசோதனை செய்கிறாயா ?
சுடர்
என்னை இருளச் செய்யாதே சுடர்.
இதயம் கனக்க பேசினான்.

என்ன சொல்கிறீர்கள் இனியன்
ஒரு வருடக் காதலில்
உயிர்நேசம் விளைந்துவிடாது.

என்
உணர்வுகள் மாறிவிட்டது
என் உணர்வுகளை மாற்றிக் கொள்ள
எனக்கு உரிமை இல்லையா ?
திருமணம் வேண்டாம் என்றால் விட்டு விடுங்களேன்.

என்ன சொல்கிறாய் சுடர்?
ஒரே ஒரு முறை சொல்லிவிடு
காரணம்.

உனக்கு பிடிக்காதது என்ன ?
நேற்று வரை என்னை உலகம் என்றாய்
இன்று என் துருவங்களைக் கூட
துருப்பிடிக்க வைத்துவிட்டாய்.

சொல்
காரணம் மட்டும் சொல்லி விடு.
பாறை சுமக்கும் பாரத்துடன் கேட்டான்.

சொல்லலாம் என்றால் வருத்தப் படுவீர்கள்
அதுதான் கவலையாய் இருக்கிறது

இப்போது நான்
சந்தோசப் படுகிறேன் என்கிறாயா ?

இன்று எனது பிறந்தநாள்.
ஆனால்
என் மனம் முழுவதும்
கவலைக் கற்கள் தான் குவிந்து கிடக்கின்றன

என் கால்கள் வேர் விட்டதாய் பூமியைவிட்டு
நகர மறுக்கின்றன.
என் சுவடுகள் கூட எனைப்பார்த்து சிரிக்கிறது..
என் நிழலின் நீளம் கூட குறைந்துவிட்டது
சொல்..
எதுவானாலும் சொல்
பொதிமாட்டு மனசோடு நடப்பது கடினம்
சொல்லிவிடு.
காதைத் தீட்டி அமைதியானான்.

சுடர் வாய் திறந்தாள்
நான்
நான்.வித்யாசாகரைக் காதலிக்கிறேன்.

சலனம் : 16



இடி ஒன்று
இதயமையத்தைக் குறிவத்துத் தாக்கியதாய்
தோன்றியது அவனுக்கு

வானம் வெறிச்சோடிப் போயிருக்க
கண்களில் பெருமழை பெருக்கெடுத்தது

அருவி ஒன்று சூரியனை உருக்கி
தலைமேல் கொட்டியது போல்
சட்டென்று எரிந்தான் .

இதயத்தின் எல்லைகளெங்கும்
எரிமலைக் குழம்பு பீறிட்டுக் கிளம்பியது.

வார்த்தைகள் புதைபட்டுப் போக
கால்கள் நிலைதடுமாற
இதயத்துடிப்பு இருமைல் தூரம் கேட்க
மயக்கத்தின் முதல் நிலைதொட்டதாய் உணர்ந்தான்

வித்யாவிடம் சொல்லிவிட்டேன்
அவனும் ஒத்துக்கொண்டான்.
என்னை மன்னித்துவிடுங்கள்.

அவள் வார்த்தைகள்
ஏதோ ஏழ்கடல் தாண்டிய
தீவுக்குள்ளிருந்து வருவதாய்
தோன்றியது அவனுக்கு

பிறகு என்ன நடந்தது என்பது அவனுக்கு விளங்கவில்லை..

சலனம் : 17



எதையும் அவனால்
விளங்கிக் கொள்ள முடியவில்லை

காதல் மேல்
எனக்கு சந்தேகமில்லை
அதில்
உன் பிம்பம் மட்டுமே உருமாறி விழுந்தது

கவிதை எழுதினான்
டைரியின் பக்கங்களில் கண்ணீர் தெளித்தான்.

கவிதைக் காகிதத்தில் கண் துடைத்தான்.
கவலைகளை கொட்ட கவிதை போல் சிறந்த
ஒரு வடிகால் இல்லை.

வலிகளை வார்த்தையில்
விளக்க அவனால் முடியவில்லை.

மாலை நேரம் வந்தால் கூடவே கண்னீரும் வந்துவிடுகிறதே
நேற்றுவரை என் கரம் கோர்த்து
மாலைகளைத் துரத்தியவள்
இன்று
என் நண்பனின் கரம் சேர்த்து என் எதிரில் சிரிக்கிறாள்.

நண்பா
நட்பின் மேல் எனக்கிருந்த நம்பிக்கையை
மறுபரிசீலனை செய்யவைத்தாயே.

உனக்கு நான் அனுப்பிய
கண்ணீர்த் துளிகளை
உப்புத் தயாரிக்க
உபயோகித்துக் கொண்டாயே.

விடியலின் முதல் நிமிடம் முதல்
கடைசிநிமிடம் வரை
கணிப்பொறியோடு கண்விழித்துக் கிடந்தான்.

காதல்
சொருகும் போது ரோஜா
உருவும் போது உதிரம் தோய்ந்த ஆணி

சிலுவைக்குக் கூட மூன்று ஆணிகள்
காதலுக்கு
அளிக்கப்படுவதெல்லாம் ஆணிகளே

வார்த்தைகளில் கூர்தீட்டி
வடுக்களை
எனில் தொடுத்தவளே

என்
சலனங்களின் சொந்தக்காரியே
இதோ என் மனம்
சலனமற்றுக் கிடக்கிறது
உன் நேசம் நிறம் மாறிவிட்டதால்

என் இதயத்தோட்டம்
அயலானின் அரிவாள்மனையில்
அறுவடையாகிறது

ஈரமணலில்
கோழிக்குஞ்சு கிளறிய நிலமாய்
என் மனசு

மௌனத்தில் கூட நிறைய வாசித்த நான்
இன்று
நினைவுகளால் மூச்சுத்திணறுகிறேன்

நிழலாய் வந்தால்
இருளில் கரைவாய் என்றுதான்
நினைவாய் வரமட்டுமே
உன்னை அனுமதித்தேன்.

இன்று நீ.
நினைவுகளில் , கனவுகளில் என்னுடன்
நிஜத்தில் நீ நிலம் மாறி விதைக்கப்பட்டாய்.

பேனாவும் விரலும் மறுக்கும் வரை
கவிதை எழுதினான்.

கவலைகளின் சாயங்களை
முதன் முதலாய் உணந்தான்.

ஏனோ தெரியவில்லை
அவள் மீது இம்மியளவும் கோபம் வரவில்லை.
நடந்ததெல்லாம் கனவாகக் கூடாதா என்று
கனவு கண்டான்.

என் சாலைகளெங்கும்
ஏன் பூவியாபாரிகள்
முட்களில் மட்டுமே முதலீடு செய்கிறார்கள் ?

அரளிப் பூக்கள்
தங்களை ஏன்
ஆம்பல் என்று அறிமுகம் செய்கின்றன ?

நீ விலகிய நான்
ஓட்டை விழுந்த ஓசோன் போல
என்னாலேயே ஒதுக்கப் படுகிறேனே.

ஒரு மாறுதல் வேண்டும்
இதயம் கதறியது
தீக்குழியில் இருந்துகொண்டு
தாகம் தீர்க்க முடியாது

இன்னொரு முறை
அமெரிக்க வாய்ப்பு வராதா என்று வேண்டினான்.
அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒரு செய்தி
இருவேறு மனநிலையில் இருபொருள் சொல்கிறதே.
ஆறுவாரப் பயணத்திற்கே அலறியவன்
இன்று
வருடப் பயணம் வேண்டுமென்கிறான்.

சலனம் : 18



நம்பிக்கை சிதைவது தான்
வாழ்வின் மிகப் பெரிய வேதனை

நண்பனும் காதலியும்
ஒருசேர விலாவில் ஈட்டி பாய்ச்சிய வேதனை !!!
நண்பா.

எதற்காக இந்த
விஷம புன்னகை ?

என் ரோஜாக்களைக்
களவாடியதற்கா ?

என் வானவில்லைக் கிழித்து
எனக்கே மலர்வளையம் நெய்ததற்கா ?

என் பூக்களை எரித்து
நேசத்தின் முகத்தில்
நிறமாற்றம் நடத்தியதற்கா?

இல்லை
என் நதிகளை கடல்பாதையிலிருந்து கடத்தி
பாலைவனத்துகுப் பரிசளித்ததற்கா?

புரிந்துகொள் நண்பனே

நீ
என் மேகத்திலிருந்து
நீர்த் துளிகளைத் திருடினாய்

எனக்கு இன்று
வண்ணங்களிலிருந்து வண்ணத்துப் பூச்சியை
வடித்தெடுக்கும் வலிமை கிடைத்திருக்கிறது.

உன் தலைக்குமேலும்
வல்லூறுகள் ஒர்நாள் வட்டமிடும்
நீ
சாகவில்லை என்பதற்கு அப்போது
சான்று தேவைப்படும்.

கவிதை எழுதிய மறுநாள் அவனுக்கு
ஆறுதல் செய்தி.
ஓராண்டு அமெரிக்கப் பயணம்.

இட மாற்றம் என்பது இல்லையென்றால்
மனமாற்றம் மலராது

மாதங்கள் உருண்டோ டின.
நினைவுகளின் பிடியிலிருந்து அவன் மெல்ல மெல்ல
விலகிக் கொண்டிருந்த ஒர் பொழுதில்
நண்பன் சொன்னான்
சுடருக்குக் கல்யாணமாம்.

சலனம் : 19



சுருக்கென மனதுக்குள் கூர் ஈட்டி பாய்ந்தது.
மனசு மட்டும்
கண்களுக்குள் ஈரமாய் கவிதை எழுதியது.

நீ கடைசியாகப் பறித்துப் போட்ட
உன்
புன்னகைப்பூ ,
என் படுக்கையருகில்
சலனமற்றுக் கிடக்கிறது.

உனக்குள் இடம்பெயர்ந்த
என்
இதயத்தின் இன்னொரு பாதி
திரும்பி என்
தெருவோரம் வரை வந்துவிட்டது.

நீ எனக்குள்
இறக்குமதி செய்திருந்த
கள்ளி முட்கள் எல்லாம்
முனை ஒடிந்து மட்கிப் போய்விட்டன.

தொடுவானம் தொட ஓடிய
நினைவுப் புள்ளிமான்களை எல்லாம்
திரும்ப என்
கூட்டுக்குள் அடைத்து தாழிட்டாகிவிட்டது.

மழையில் கரைந்த பாதி ஓவியமாய் தான்
இப்போதெல்லாம் உன்
மீதி நினைவுகள்
மிதந்து கொண்டிருக்கின்றன.

காதலின் வெட்டுக்காயங்களை எல்லாம்
நிகழ்வின் தசைகள் வந்து
நிவர்த்திவிட்டன.

வேதனைகளின் முடிவுரையாய்
ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும்

எப்போதேனும் எனைக் கடக்க நேர்ந்தால்
எதிரியாய் பாவித்துப் போ.
இன்னொரு புன்னகையை மட்டும்
பறித்துப் போடாதே.

கவிதை வடிய
கண்களை மூடினான்

அவன் இதயத்துக்குள் ஓர்
இதிகாசம் இறக்கத் துவங்கியிருந்தது.
இன்னொரு வரலாறு படைக்க
அவன் விரல்கள் விழித்திருந்தன.


xavier.dasaian@gmail.com