கனடா:
மேதினியாள் விள்ளும் அழகே!
தேசபாரதி தீவகம்
வே.இராசலிங்கம்
கூறுமொரு மானிடத்துக் கொண்டலென வந்துலகங்
கொள்ளுமொரு நந்த வனமோ
வீறுகொள வைத்தமனம் வித்துவத்துக் கென்றுதமிழ்
வேய்ங்குரலைப் பெற்ற மகளோ
ஆறுகொள நானழைந்து அட்டியெனப் பாடிவர
அன்னையென நின்ற எழிலோ
நூறுமொடு ஐம்பதுமாய் நெய்க்கனடா பூத்துவர
நிற்பதுவும் அன்பு நெறியோ!
காருமழை யானுருகிக் கம்பனென ஊறுகவி
கட்டவிழச் சின்ன வயதில்
ஊருவனம் துள்ளியொரு ஒத்தடங்க ளாம்தமிழை
ஒப்புஎன வைத்த பொழுதில்
நீர்முழுக அன்னையிடம் சீயமொடு வெந்தயமும்
நின்றுமுழு கிட்ட வயதில்
வாருறைய வைத்தமணி பல்லவமாய்த் தேனருவி
யாக்கியவள் அன்னை தமிழே!
ஆறுகட லாயிரமாய் ஆர்சுனைக லட்சமென
ஆனவளெம் அன்னை கனடா
வாருலகில் நீளமென வாகியதாம் யங்(கு)வீதி
வாய்த்தவளாம் வஞ்சி கனடா
ஊருகடல் அம்நிலமும் ஒத்துருளுங் காரலையும்
ஓங்குகரை உள்ள பெரிதாம்
பேருலக நாடுகளில் பூமியிவள் ரெண்டெனவே
பூமியள வுற்ற மகளாம்!
நீருலவும் நன்நயாக ருண்டுவிழும் நல்லழகிற்
சொக்கவிழும் மக்க மனதாம்
பேருமாநி லங்களென்ன பூத்தபத்து என்றுகனம்
பொங்கிவருஞ் சொத்து வடிவாம்
சேருமான் தீங்கரடி வாத்துகளும் தேன்முயலுந்
துள்ளவரும் தொன்ம அடராம்
யாருமொரு ஈடுஇணை இல்லையெனும் யாப்பெமது
எம்கனடா என்கு முரையாம்!
ஆங்கிலம்பி ரெஞ்சுமென ஆனமொழி யாட்சியிலும்
ஆலயங்க ளன்ன பிறவும்
பூம்மதங்க ளத்தனையும் போற்றிவரச் சாசனமும்
பொன்மனங்க(ள்) ளென்ன உறவும்
பாங்கினிய பண்பினொடு பாருலக மெல்லமுதும்
பங்கெனவே பெற்ற வடிவாம்
வீங்கிவரு(ம்) நல்லுறவும் வித்துவமும் பொற்கனடா
மேதினியாள் கொள்ளும் அழகாம்!
வாய்ப்பாடு: ஐந்து கூவிளங்காய் தேமா மா என்னும்
வாய்ப்பாடு
(ஒரு அடியில் இருபத்திஐந்து எழுத்துக்கொண்ட சதாக்கர
விருத்தம் இது)
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்