காலமெலாம் வாழுகிறாய்

எம்.ஜெயராமசர்மா - மெல்பேண்

ங்கள்கவி கண்ணதாச
என்றும்நீ வாழுகிறாய்
தங்கநிகர் கவிதந்த
தமிழ்க்கவியே நீதானே

தங்கிநிற்கும் வகையினிலே
தரமிக்க கவிதைதந்து
எங்களுக்கு அளித்தவுன்னை
எம்மிதயம் மறந்திடுமா

பொங்கிவரும் கடலலைபோல்
புதுப்புதிதாய் பாட்டெழுதி
எங்கும்புகழ் பரப்பியதை
எம்மிதயம் நினைக்கிறதே

தங்கத் தமிழ்மகனே
தரமான தமிழ்ப்புலவா
எங்குநீ சென்றாலும்
எல்லோரும் உனைமறவோம் !

கவிச்சிங்கம் உனக்காக
பலசங்கம் எழுந்துளது
கவிபாடி கவிபாடி
கவிஞரெலாம் போற்றுகிறார்

புவிமுழுதும் உன்புகழோ
பொலிந்தெங்கும் இருக்கிறது
கவியரசே கண்ணதாச
காலமெலாம் வாழுகிறாய் !

நீபாடாப் பொருளில்லை
நீயெடுக்கா உவமையில்லை
தாய்த்தமிழே உன்னிடத்தில்
சரண்புகுந்து இருந்திடுச்சே !

களைப்பெமக்கு வந்தாலும்
கவலையெமைச் சூழ்ந்தாலும்
கண்ணதாசா உன்பாட்டே
கைகொடுத்து நின்றதையா !

வைத்தியர் முதற்கொண்டு
நோயாளி யாவருக்கும்
வரமாக உன்பாட்டே
வாய்த்ததை நாம்மறக்கமாட்டோம் !

அர்த்தமுள்ள கருத்துகளை
அள்ளித்தந்த பெருங்கவியே
ஆண்டாண்டாய் உன்புகழை
அனவருமே போற்றிடுவோம் !
 

                                    
 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்