தோற்றுப்போன காகத்தின் இரங்கல் பாடல் .....

நாச்சியாதீவு பர்வீன்



பிணங்களை தின்று
கொழுத்து அருவெறுப்பாக
காடுகளில் அலைந்து
திரிந்தது அந்தக்காகம்

அண்டங்காக்காய் அது
குப்பைகளை கிளறித்தின்பதில்
அதற்க்கு அலாதிப்பிரியம்

இறந்து போன
மிருகங்களின் அழுகிப்போன
அங்கங்களை அது
ருசித்து உண்ணும்

விளம்பரத்திற்காய்
விருந்து வீடுகளில்
வந்து நின்று
அலம்பித்திரியும்
அற்பப் பிராணியது

திருடித்தின்பதில்
அதற்க்கு நிகர் அதுதான்

காகத்தின் கர்வம்
யாருக்கும் தெரியாது

அது கரைந்து கொண்டே
வேலிக்கம்பிகளில் வந்து
நிற்கும் போதுகளில்
எச்சில் சாப்பாடு போட்டு
வளர்த்தான் அந்த எஜமானன்

தான் கரைவதால் தான்
எஜமானுக்கு
அதிஷ்டம் என்று
நம்பித் தொலைத்தது அது

ஒருநாள்
எச்சில் சோறு
மிச்சமில்லாமையினால்
அன்று அண்டங்காக்கைக்கு
அது கிடைக்கவில்லை

காகத்திற்கு கர்வம்
தலைக்கேறியது
பித்துபிடித்தது போல
கரைந்து திரிந்தது

இப்போது
அண்டங்காக்காய்
அழுது திரிகிறது

புழுத்த பொய்களை
அவிழ்த்து விட்டு
கூட்டம் சேர்க்கப் பார்த்து
தோற்றுப்போனது அந்தக்காக்கை

நாளை
கல்வெட்டுக்களில்
அந்தக்காக்காவின்
பெயரும் இடம்பெறும்
தோற்றுப்போனதால்
அந்தக்காகம் இரங்கல் பாடல்
பாடியதென்று

வந்தால் விரட்டுங்கள்
வளவுக்குள் விடாதீர்கள்
கோபப்படாமல்
கொன்று புதையுங்கள் ...







       

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்