அமரர் பண்டிதர் ம.செ.அலெக்சாந்தர் (கவிதாஞ்சலி)

கவிநாயகர் வி.கந்தவனம்




ற்றுடன் பாய்ந்தநம் பண்டிதர் அலெக்சாந்தப்
பாலாறு தானாகவே
வற்றித்தான் போனதோ எற்றுக்கிவ் அவசரம்
வானகம் சென்றெய்தவே!

என்னகுற் றங்களைச் செய்தனம் அவைபற்றி
ஏதுமே அறிந்திலோமே
மன்னவ வண்டமிழ் அன்னையும் வாடியே
வதங்குதல் காண்கிலாயோ?

உன்காதல் மெற்றில்டா அம்மையார் தம்மையும்
உண்மையாய் மறந்தாய்கொலோ
மன்னுயிர் பிள்ளைகள் மாசிலாப் பாசமும்
வானத்திற் கிடைக்குமாமோ?

அண்ணலே இலக்கணம் கற்பித்த ஆர்வமும்
அடங்குமோ முடங்குமோதான்
எண்ணிலா மாணவர் மனங்களைக் கவர்ந்தவர்
ஏத்தவே பவனிவந்தாய்!

இணரூழ்த்து வாசைன மலரொப்பக் கற்றதை
உணரவே விரித்துரைத்தாய்
கணமேயும் கார்முகில் போலவே நீபொழியும்
கருத்துக்கள் வரண்டதாமோ?

சித்திரம் கெட்டது செம்மரம் பட்டது
தேரோட்டமும் நின்றது
வித்தகம் வீழ்ந்தது வீறுநடை சாய்ந்தது
மேகமும் கலைந்ததாமோ?

எந்நாளும் வகுப்புக்குத் தன்வாக னத்திலே
ஏற்றியே இறக்கிவந்த
தன்னார்வ மாணவன் பொன்னான அருட்கவி
தன்னையும் மறந்தாய்கொலோ?

யாரைநீ மறந்தாலும் யாமுன்னை மறக்கிலோம்
ஐயாநீ ஓர்கற்பக
பேருயர் விருட்சமாம் பீடுற வானகப்
பெருவழ்வில் தூங்குவாயே!


நட்புக் கவிஞர்கள்
கனடா தமிழ்க் கவிஞர் கழகம்


    

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்