தீபாவளித் திருநாள்
கவிஞர் முருகேசு
மயில்வாகனன்
சீனத்துப்
பட்டாசும் சிங்கார உடைகளும்
ஈனமற்ற தீன்பண்டம் இடையிடையே சேர்ந்துகொள
மானமுள்ள சொந்தபந்தம் மதிப்பாக ஒன்றுகூடும்
ஆனதிந்தத் தீபாவளித் அழைத்திடுமே அனைவரையும்.
ஆரியர் படையெடுப்பும் அதிகார ஆட்சியும்
சீரியராய் வாழ்ந்தவர்கள் சிதைவடையக் காரணமே
பாரிய மாற்றங்கள் பண்பாட்டின் சீரழிவும்
சேரிகளை உண்டாக்கிச் சிதைத்தார்கள் எம்மவரை.
இயற்கை வழிகாட்ட இன்பமாய் வாழ்ந்தவர்கள்
தயக்கமுடன் ஏற்றார்கள் தப்பான விழாக்களையே
நயத்தக்க நிகழ்ச்சிகளும் நட்பான சேர்க்கைகளும்
மயக்கத்தைத் தந்தாலும் மாற்றமென்று ஏற்றனரே.
திருமலை நாயக்கர்பின் தீபாவளித் திருநாளைக்
கருவாய் அமைத்தே களிப்படைந்தார் வந்தவர்கள்
அருவாம் உருவாம் ஐயன் முருகனின்
கருவாம் கார்த்திகையை ஏற்றனரே செந்தமிழர்.
பிள்ளையார் சுழியுடனே பிள்ளைகட்குக் கல்விதந்தோம்
கள்ளத் தனஞ்செய்வோர் களிமண் பிள்ளையாரை
வெள்ளத்தில் கரைப்பதன் வேதனையைப் பார்ப்போரே
தள்ளிவைக்க முடியுமா தவறான விழாக்களையே.
வர்த்தகர்க் கேற்றதிந்த வாய்ப்பான தீபாவளி
அர்த்தமுள்ள தென்றவர்கள் அரவணைப்புச் செய்கிறார்கள்
சேர்த்துவைத்த பணமெல்லாம் செலவுசெய்யும் காலமிது
தர்க்கஞ் செய்யும் காலமல்ல இந்நாள்தான்.
வந்தாரை வரவேற்று வாழ்வளித்த செந்தமிழர்
இந்நாள் படும்பாட்டை இங்கெடுத்துச் சொல்கிறேன்
முந்தையோர் விட்டபிழை முறையாய்க் கற்றறிந்தே
முன்னெடுப்பர் எம்மிளைஞர் முறையான ஆட்சியையே.
கவிஞர் முருகேசு மயில்வாகனன்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்