தஞ்சாவூர்
கவிஞர் புகாரி
(என்னதான் இருக்கிறது என் ஊரில்?)
வானூறி
மழைபொழியும்
வயலூறிக் கதிர்வளையும்
தேனூறிப் பூவசையும்
தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலம்கூட
பசியாறும் தஞ்சாவூர்
தேரோடித் தெருமிளிரும்
திருவோடி ஊரொளிரும்
மாரோடி உயர்பக்தி
மதமோடி உறவாடும்
வேரோடிக் கலைவளரும்
விரலோடித் தாளமிடும்
பாரோடிப் பொருள்வெல்லும்
பொன்னோடும் தஞ்சாவூர்
சேறோடி நெல்விளைத்து
ஊரோடி உணவளித்து
யாரோடி வந்தாலும்
கண்ணோடிக் கறிசமைத்து
நீரோடி வளர்வாழை
நிலமோடி இலைவிரிக்க
ஓடோடி விருந்தோம்பி
விண்ணோடும் தஞ்சாவூர்
வாய்மணக்கும் வெத்திலைக்கும்
வயல்மணக்கும் காவிரிக்கும்
காய்மணக்கும் தென்னைக்கும்
கைமணக்கும் பட்டுக்கும்
சேய்மணக்கும் சேலைக்கும்
சிகைமணக்கும் பெண்ணுக்கும்
தாய்மணக்கும் பண்புக்கும்
தரம்மணக்கும் தஞ்சாவூர்
தலையாட்டும் பொம்மைக்கும்
அலைகூட்டும் பாட்டுக்கும்
கலையூட்டும் கோவிலுக்கும்
சிலைகாட்டும் சோழனுக்கும்
மழைகூட்டும் மண்ணுக்கும்
பிழையோட்டும் தமிழுக்கும்
நிலைநாட்டும் புகழோடு
எழில்காட்டும் தஞ்சாவூர்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்