தற்கொடையாளர் (மாவீரர்)

கவிஞர்  முருகேசு மயில்வாகனன்
 


தாய்நாட்டுப் பற்றினாலே தாய்தந்தை அல்லலுற
வாய்பேசா தோடி வனம்புகுந்தே – ஓய்வின்றி
நாளும் பயிற்சிபெற்று நற்றலைவன் காப்பினிலே
ஆளுமை பெற்றனரே ஆம்.

எங்கிருந்தோ வந்தவர்கள் ஏற்ற பயிற்சியினால்
பங்கமிலாக் காவலராய்ப் பாசமுடன் - தங்கடமை
பற்றுடனே செய்து பதவி உயர்வினை
பெற்றனரே நேர்வழியால் பேறு.

சட்டம் ஒழுங்கு சகலருக்கும் ஒன்றேதான்
தட்டியே கேட்கத் தலைவருண்டே – சட்டத்தின்
கண்ணோட்டம் காவலர் காட்டும் திறமைகள்
வண்ணத் தமிழரசின் வாய்ப்பு.

ஆளுமை கொண்ட அரசுடன் போர்ப்படையும்
தோள்;கொடுக்கத் தம்பி தொடர்ந்தான் - தாள்பணியா
நல்லாட்சி சிங்களம் நெட்டுயிர்த்தே செய்வதறியா
அல்லலுக் காளான தாம்.

போர்வெறி கொண்டதந்தப் பொல்லாத சிங்களம்
தார்மிகம் அற்றவராய்த் தாக்கினார்கள் - ஊரிலுள்ள
ஆலயத்தில் தஞ்சமுற்ற ஆண்பெண் இளைஞர்கள்
காலநேரம் பாராதே தான்.

வெற்றிவாகை சூடுநேரம் வேதனைகள் பற்பலவே
உற்ற துணையாய் உலகநாடுகள் - பற்றுடனே
சேர்ந்து பலவழியில் தாக்கி அழித்தார்கள்
ஆர்வமுடன் எம்மவரை ஆம்.

கல்லறை யானீர்கள் காவலராம் தெய்வங்காள்
சொல்ல முடியாத சேவைகள் - எல்லாமே
தந்துசென்றீர் தாயக மீட்பிற்காயத்; தாம்பட்ட
வெந்துயர்கள் எத்தனையோ சொல்.

காற்றாகி மண்ணாகி காலன்கை சென்றாலும்
ஊற்றாகி எம்மனதுள் ஊன்றிவிட்டீர் – ஆற்றலர்காள்
தாய்மண்ணைக் காக்கத் தரணியில் உம்பணிகள்
வாய்விட்டுச் சொல்தரமன் றோ.

கார்த்திகைப் பூக்களாய்க் காட்டிலே பூத்தாலும்
மார்தட்டிப் பேசவைத்தீர் மக்கள்முன் - சீர்பெற்ற
ஆளுமையும் ஆற்றலும் கொண்ட கரிகாலன்
வேள்விச் சிறப்பினைச் சொல்.





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்