நினைத்தோம் எங்கள் உறவே!

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்




கார்த்திகையின் பிள்ளை கண்மடலிற் தொட்டுக்
       கார்மனது ஒப்புங் கனிவாய்த்
தார்(ய்)மனது வந்து தண்தமிழிற் பாடித்
       தங்கஇசை தந்தார் இதுநாள்
நீர்க்கடலில் ஆடி நின்றமடி விட்டு
       நித்திரையில் அள்ளிப் பனித்துப்
போர்க்கடலின் பின்னால் புதுஏடு ரைத்த
       பிள்ளைகளைப் பார்க்கும் புதுநாள்!

வேர்த்தஉடல் வேர்த்து விக்கியழ வைத்து
       விழுந்தஉடல் தன்னில் விழுந்து
ஆர்த்தகணங் கொண்ட அன்னைநிலம் பாடி
       அங்கையிலே அள்ளி விடவோ?
தீர்த்தமன துற்றுத் தீந்தமிழிற் சந்தத்;
      தீபமுனக் கிட்டு விடவோ?
சார்த்ததிடல் வந்தோம்! சந்திரரைக் கண்டோம்
       சங்கார்த்து ஊது கின்றோம்!

தீபமொடு வந்து செப்புதிரை நீக்கித்
       தூபமிமொடும் பாடும் எமக்குத்
தாபமொடு பார்க்கும் தண்முகத்தை யீர்த்துத்
       தந்திடுவீ ருங்கள் வதனம்!
கோபமொடு சிங்கக் குடியாடல் எண்ணாக்
      குணத்தையே மெச்சும் உலகம்
நீபடையின் நீதி நின்மிடியை வெல்லும்
       நீதியது ஒன்றே நினைக்கும்!

மாண்புடைய மைந்தர் வண்ணமுகம் பார்க்கும்
      மாபருதி காணும் மணிநாள்
காண்உலகம் எல்லாம் கட்டுருக நின்றே
      கனிவாக விள்ளும் அணிநாள்
பேண்உலக மெல்லாம் பேதமற வைத்துப்
      பெண்களுமோ டாட வருமாய்
ஈண்டுவுனைக் கண்டு எங்களுயிர் என்றே
      ஈர்க்கிறதே அன்பு உறவே!

பொப்பிமலர் பூத்த கார்த்திகையி னோடும்
      பெருங்காந்தள் பூத்து வருமே
செப்பியுரு வாகிச் செந்தமிழுங் காக்கும்
      சிந்தனைக ளார்த்து வருமே
தெப்பமெனக் கண்ணீர்த் தீபமொடு வாட்டும்
      தேன்மறவர் வாழுங் கருவாய்
ஒப்பரிய வேதம் உரித்தாகக் கொண்டு
     ஒற்றுமையென் றாகும் இனமே!



தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்