தன்னம்பிக்கை
பெருமாங்குப்பம், சா.சம்பத்து
முதிர்ந்த
விதை
மண்ணை நம்பி விழுகிறது
ஈரம் தழுவும்போது
எட்டிப் பார்க்கிறது...!
அருவி நீர்
ஆசையாய் இறங்கி வருகிறது
ஆறு அரவணைக்கும் எனும் நம்பிக்கையோடு
ஆறோ
கடலையே காட்டிவிடுகிறது...!
உணவு கிட்டும் எனும் நம்பிக்கையோடு
வலையைப் பின்னுகிறது சிலந்தி
சில பூச்சிகளாவது
வலைத்தட்டில்
வந்து விழுந்துவிடுகிறது...!
எல்லாமே
நம்பிக்கை தான்...!
கால்களில் ஒன்றை இழந்த
அருணிமா சின்கா
ஒரு செயற்கைக் காலுடன்
எவரெஸ்டு சிகரத்தையே எட்டிவிட்டாள்
தன்னம்பிக்கை தான்
பனிச்சிகரத்தில் அவளைத் தூக்கி நிறுத்தியது...!
கைகளே இல்லாதவனின்
கால் விரல்கள் கூட
கண்களைக் கவரும்
ஓவியத்தை வரைந்துவிடுகிறது...!
கொள்கைகளும்
கோட்பாடுகளும்
தன்னம்பிக்கை வேர்களால்தான் வளர்த்தெடுக்கப்படுகிறது...!
மண்ணின் வரலாறு கொடுக்கும்
மரணக் குறிப்புகளும்
மண் படிந்த குறுதிக்கறையும்
தன்னம்பிக்கைக்கான படிமங்கள்...!
தன்னம்பிக்கை துணை நின்றதால் தான்
முதலாளி வர்க்கத்தை எதிர்த்துப்
பாட்டாளி வர்க்கம்
புரட்சியைப் படைத்துக் காட்டியது...!
பறவைகள் போல்-அன்று
ரைட் சகோதரர்கள்
கைகளை அசைத்ததனால் தான்
வானம் இன்று
விமானங்களுக்கு வசப்படுகிறது...!
சோழப்படைகளின் மனத்திடம் தான்
ஆழிப் பேரலைகளையும்
வென்று விரைந்தது...!
இளைஞர்களே...!
கிழக்கு வெளிச்சத்தால் தொலைந்துபோகும்
நட்சத்திரமாய் இல்லாமல்
மேற்கு இருட்டையும் வென்று ஜொலிக்கும்
வளர்பிறை போல் ஒளிர
தன்னம்பிக்கையே துணை நிற்கும்...!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்