பாரொடுங் கவிஞன் பாரதி
தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்
பாரதி
செந்தமிழ்ப் பாவலன் பூமியில்
பண்புடன் வந்தவோர் அருங்கவிஞன்
சாரதி என்கவுந் தண்தமிழ் ஒப்பிய
சந்ததி யால்மனஞ் சார்மனிதன்
தீரமாய் வீறுடன் தேசமாய் இந்தியத்
தொல்லறஞ் சாற்றிய தீந்தமிழன்
வீரமாய் நின்றுவீண் மாந்தரைச் சாடிய
வெங்களத் தால்வருந் தேசபக்தன்!
பண்புநி றைதமிழ் பாகுக னித்தமிழ்
பல்கிடுஞ் சால்புகப் பாரதியார்
மண்ணிற் பிறமதந் தன்னையும் மெச்சிய
பாசவு ணர்விடுந் தாரகையார்
எண்ணுக வித்திறன் இன்பமும் ஊடக
ஏட்டிலும் விடியலைக் காட்டியவன்
மன்னுமொ ழிக்கெலாம் வார்கவி யானவன்
மத்தளங் கொட்டிய மாமனிதன்!
எட்டுமொ ழித்திறன் இந்துஸ் தானொடும்
இன்னும்ப யில்மொழி ஈர்ப்பனவாய்
தொட்டமொ ழிக்கெலாம் தேன்தமிழ் போலொரு
செம்மொழி யில்லையென் றார்த்தமகன்
பட்டவூ டகத்தொடும் பத்திரி கைத்தொழில்
பார்த்தவி டத்திலும் ஆங்கிலத்தார்
எட்டும்வ ரையிலும் ஓதியவன் அந்நியர்
எங்கு(ம்)தே டிப்புக வைத்தமகன்!
செல்லம்மா நல்லுளத் தேன்மனை யானவள்
சேர்த்தஅ ரிசியையும் பறவைக்குச்
சொல்லிய ழைத்துண வாக்கிய செம்மயன்
தெய்வமுங் கட்டியஞ் செய்தமகன்
தெள்ளிய மதங்களில் அத்தனை யுஞ்சரி
யென்கம ணித்தமிழ் சொல்லியவன்
உள்ளமி லக்கியத் தொன்மர பாக்கிய
உத்தமப் பாவினை நல்கியவன்!
பாரதி பிறந்தநற் பார்திதி யாகிடப்
பற்றிய கார்கவி அத்தனையும்
சாரம தாக்கிய சார்நெடுங் கோவிலில்
சஞ்சரிக் கின்றவோர் செந்தமிழீர்
தூரமென் காசியிற் தீம்மடம் செப்பிய
தேன்தமிழ்க் குமாரரும் பாரதிக்கும்
ஆரமென் றாக்கிய அன்னைத மிட்குமாய்
அப்பருந் தாயுமாய் ஆகிடுவீர்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்