பாரதி யார்? (இன்னிசை கலிவெண்பா)

கவிஞர் முருகேசு மயில்வாகனன்

ட்டயபு ரந்தந்த ஏந்தலாம் செந்தமிழ்ச்
சுப்ர மணியெனும் சுந்தரச் செல்வனின்
நாவில் சரஸ்வதி நாளுமே வீற்றிருந்தே
ஆய கலைகளின் ஆளுமை தந்ததனால்
பாட்டுக் கொருபுலவன் பாரதி யானாயே
ஏழ்மையாய் வாழ்ந்தாலும் ஏறுநடை போட்டனையே
அந்நியர் ஆதிக்கம் ஆட்கொண்ட காலமது
தன்மாங் கொண்டே தயக்கமின்றி எவ்விடமும்
எஞ்ஞான்றும் அஞ்சா தெடுத்துரைத்தாய் செந்தமிழை
பத்திரிகை ஆசிரியன் பாவெழுதும் பாவலனாய்
நாட்டுக்கு நல்லதை நன்குணர்ந்து செய்தனையே
வெள்ளை அரசு வெருட்டி அடித்தாலும்
தன்மானம் ஓங்கிடவே தாழ்வின்றி உன்பணியை
இன்னலுற்ற போதும் இயலாமை என்றிராது
தோழமைசேர் நட்பால் தொடர்ந்தாய் உறுதியுடன்
காக்கை குருவியெங்கள் சாதியென்றே சாதித்தாய்
ஓடி விளையாடு ஓய்ந்திருக்க வேண்டாம்
உயர்வுதாழ் வில்லையென்றாய் ஒன்றே குலமாம்
மதபேதம் இல்லை மனிதநேயம் ஒன்றே
குலபேதச் சீராழிவால் குன்றும் தமிழனத்தைச்
சீர்செய்ய எத்தனித்தே செப்பினாய் பாக்களையே
பாடிய பாடல்கள் பற்;றினவே நெஞ்சமதை
ஆன்மிக வாதியாய் அன்பால் அரவணைத்தாய்
செப்பாத் தலைப்பேது செல்லா இடமேது
வாழ்காலம் கொஞ்சம் வலிமை பெரிதுனது
ஆழ்ந்தறிவு கண்டே அகிலம் அரவணைக்கத்
தாழ்ந்து வணங்குகிறோம் தான்.
 


 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்