உன்னைப் படித்ததனால் என்னை வடித்தேன்!
(இன்னிசைக் கலிவெண்பா)
கவிஞர் மாவிலி மைந்தன், கனடா
அன்னைத்
தமிழின் அருந்தவத்தால் வந்தவனே
உன்னை அடைந்தே உயர்வுற்றோம் முன்னேநீ,
தாயவளை வாழ்த்திவைத்த சந்தத் தமிழாலே
தூயவளை நாங்கள் துதித்து வணங்குகிறோம்!
யாமறிந்த எம்மொழிக்கும் எந்தமிழே ஏற்றமென்று
தேமதுரப் பாட்டாலே தேசமெங்கும் மெய்யுரைத்தாய்!
கூரான வேல்முனைபோல் குத்தும் கவிதைகளால்
போராளிப் பாவலனாய்ப் போர்முரசு கொட்டிநின்றாய்!
அச்சத்தைப் போக்க அடிமை விலங்கறுக்கத்
துச்சமெனத் தன்வாழ்வைத் தூக்கி எறிந்தவன்நீ
அக்கினிக் குஞ்சால் அறியாமைக் காடுகளின்
திக்கை எரித்துத் தெளிவு பிறக்கவைத்தாய்!
நெஞ்சில் உரமுமற்ற நேர்மைத் திறனுமற்ற
வஞ்சனைப் பேடிகளை வண்கவியால் சாடியவன்!
சாதி சமயமென்று சண்டையிடும் மூடர்மேல்
மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தவன்நீ!
பெண்ணடிமை அற்ற பெருமை மிகுநிலமாய்
மண்ணிற் தமிழகத்தை மாற்றிவைத்த மன்னவன்நீ!
தீப்பிளம்பாய்த் தீமைகளைத் தீய்த்த எரிமலைநீ
பூப்பிளம்புக் காடாகப் பூத்த புதுமையும்நீ!
வீட்டுச் சுவருக்குள் வாட்டும் வறுமையிலும்
பாட்டுத் திறத்தாலே பாலித்த பாவலன்நீ!
காக்கைக் குருவியையும் கத்தும் கடலினையும்
தூக்கிவைத்தென் சாதியெனத் துள்ளிக் குதித்தவன்நீ!
கண்சிவந்த காரிகையாள் கட்டவிழ்த்த கூந்தலினாள்
மண்சிவக்க வைத்ததையும், மானத்தைக் காத்ததையும்,
பெண்கலந்தோர் பேடிகளாய்ப் போனதையும் கண்கலங்கப்;
பண்கலந்தே நீயுரைத்தாய் பாஞ்சாலி காதையிலே!
வள்ளுவன் கம்பன் வழியில் இளங்கோபோல்
தௌ;ளு தமிழ்க்கவியே தேர்ந்தெடுத்தாய் ஓரிடமே!
மின்னற் பொறிபோல் மிடுக்கான தோற்றமொடு
கன்னற் கவியுனைப்போற் காசினியில் யார்பிறப்பார்!
உன்னைப் படித்ததனால் என்னை வடித்தவன்நான்
தன்னேர் இலாவுன் தமிழால் உயர்ந்தவன்நான்!
பாரதியே உன்பாட்டுப் பாதிக்காப் பாவலர்கள்
பாரதனில் யாருமிலர் பார்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்