தமிழ்நாட்டைத் தமிழனே ஆளவேண்டும்

கவிஞர் முருகேசு மயில்வாகனன்



அந்நாளில் எம்நாட்டை ஆண்ட மன்னர்
       ஆற்றலுடன் நல்லாட்சி அளித்துச் சென்றார்
இந்நாளில் ஆள்வோரோ இறைமை அற்றே
       ஏதோதோ செய்துமே ஏப்ப மிட்டே
வெந்துயரில் மக்களை வேக வைத்தே
       வெங்கொடுமைக் காளாக்கும் வேத னைதான்
சிந்தனைசெய் செந்தமிழா சீக்கி ரந்தான்
       செந்தமிழ்த் தலைவனைத் தேர்ந்தெ டுப்பாய்.

செந்தமிழன் காமராஜர் சீரான ஆட்சி
       செம்மையாக மக்களுக்குச் சேவை செய்தார்
இந்நாளில் ஆள்வோரோ இரக்க மற்ற
      ஏழைகளை இயன்றவரை ஏமாற் றுகிறார்
தன்மானம் மிக்கநற் தமிழரைத் தேர்ந்தால்
       தக்கநல் லாட்சியால் தமிழக மோங்கும்
இன்னலிலா வாழ்வுக்கு இதுவே சிறப்பு
       இதையுணர்ந்தே வாக்களித்து இன்பஞ் சேர்ப்பாய்.

இலஞ்சமற்ற நாடொன்றை ஈர்ப்பாய்க் காண
       இதயத்தைச் சீர்செய்து இளைஞர் ஒன்றாய்
நலன்காணச் சேர்ந்திட்டால் நன்மை தானே
       நன்றாய்ந்தே நல்லவரைத் தேர்ந்தெ டுத்தே
நிலங்காக்க மண்காக்க நீர்காக்கச் சேர்வீர்
       நீதியுங்கள் கைகளில் நிலைக்கச் செய்வீர்
பலமுங்கள் கைளிலே பார்த்துக் கொள்வீர்
      பாசமுடன் வாக்களித்துப் பதவி காண்பீர்

நல்லாட்சி செய்வோரை நாடி நிற்போம்
       நாடு முன்னேற நன்மை செய்வோம்
வல்லவர்க்கு வாக்களித்தே வலிமை சேர்ப்போம்
       வறுமையைப் போக்குதற்கு வழிகள் காண
நல்லதிட்டம் தீட்டியே நாடு முன்னேற
       நற்பணிகள் செய்வோரை நாடி நிற்போம்
கல்வியும் வைத்தியமும் காசின்றிச் செய்ய
       காண்போமே நல்வழிகள் கடமை யாக.

எல்லாளன் ஆண்டநாட்டை எங்கி ருந்தோ
       ஏதிலியாய் வந்தவர்கள் ஏப்ப மிட்டார்
வல்லாளர் சேர்ந்தொன்றாய் வழிகண் டார்கள்
      வாழ்விடத்தை மீட்டிட்டார் வலிமை யாலே
பொல்லாத சிங்களத்தார் சூழ்ச்சி செய்ய
      பொறுக்காதே மாவீரன் பொங்கி எழுந்தே
வல்லதோர் படையுடனே மோதிக் கொள்ள
       வாய்ப்புக்காய்ப் பாரதத்ததின் வலிந்த பங்கே.
 







 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்