கேடிறைத்த
அரசியலைக் கூட்டில் அடைப்பீர்!
தேசபாரதி தீவகம்
வே.இராசலிங்கம்
என்னினிய தமிழகமே
என்று பாட
எனக்குமனம் ஒப்பவில்லை இன்னுங் கேளீர்
கன்னலொடும் பால்சுவறிக் கற்கண் டூறிக்
கற்பனையில் வாய்த்தமனக் கவிதை யாற்றின்
பின்னலிலே மாதவளிள் பூக்கும் பெண்மைப்
பேச்சினிலே தமிழுண்டா அதுதான் இல்லை
அன்னநடை வண்ணமொழி அழகு நாடு
ஆங்கிலமாய் மாறுதடா ஆபத் தன்றோ?
உமிழுக்கும் ஆங்கிலத்தின் மோகம் உண்டு
உழைப்பில்லா மாந்தருக்கும் ஒருசொல் பேசி
தமிழுக்குட் தமிங்கிலத்தைச் சேர்த்துப் பூட்டித்
தருங்காணல் தமிழ்நாட்டின் வடிவம் ஆச்சு!
அமிழ்கின்ற சொல்பிசகி இனத்தின் கேண்மை
அச்செல்லாம் மாறிவிடின் அடியே மாறும்
இமையோடும் மொழிபோக எதுவும் மிஞ்சி
இருக்கத்தான் போவதில்லை இதுவே உண்மை!
பாரதியுந் தண்தமிழர் பதிந்த காதற்
பக்குவமும் சுதேசிகளாய்ப் பண்பும் ஈர்த்த
வீரமுறும் விடியலுக்காய் விதைத்த வண்ணம்
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளைந்த பாக்கள்
காரமுடன் ஈழமண்ணின் கருத்து மாகிக்
கதிரெடுத்து
வந்துமென்ன காலஞ் செத்து
ஈரமுடன் தமிழினத்தை எண்ணும் மாந்தர்
இனவாத ஊடகங்கள் எல்லாம் உண்டே!
தான்தப்பத் தமிழினத்தைத் தறிக்க வேண்டின்
சந்ததியும் போனாலும் தறித்தே நிற்பார்!
ஊன்கலந்து என்னத்தைச் செய்தால் என்ன
இந்தியத்துக் கொருகாலும் ஏடே திறவார்
கூன்விழுந்த தமிழனுயிர் கொடுத்தா ரல்லால்
கூர்ங்கடலிற் கனகவலம் கொண்டா ரில்லை
கோன்வளர்ந்த தமிழ்நாட்டீர் கொஞ்சங் கேளீர்
கேடிறைத்த அரசியலைக் கூட்டில் வைப்பீர்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்