வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு.. 

வித்யாசாகர்!



ழனியெங்கும் மண் நிறைத்து
விலைநிலமாக்கி விற்றோமே; இன்று விவசாயமும்
விற்றுப் போச்சே; விளங்கலையா..?

செந்நெல் போட்ட மண்ணில்
மாடி வீடுகளை விதைத்தோமே; இன்று
மாடுகள் உயிரறுந்துப் போச்சே, தெரியலையா..?

காடுகளை அழித்த மண்ணில்
வீடென்கிறோம்; கோவிலென்றோம்;
உள்ளே சாமியில்லையே.., புரியலையா ?

மரங்களை வெட்டி வெட்டி – மனிதர்களை
அறுக்கத் துணிந்தோம், விளம்பரத்தை நம்பி
நடிப்பதை வழ்வாக்கினோமே, அசிங்கமில்லையா ?

உறவுகளுக்குள் பேசவே துணிவில்லை
உயிரறும்போது கேட்க வீரமுமில்லை
பயத்தில் செத்து செத்து பிழைக்கிறோமே, உயிர்பிச்சை உறுத்தலையா ?

எண்ணெய்க் கப்பல் கடலில் கவிழ்வதும்
எந்தாய் நிலத்தை எவனோ ஆள்வதும்
புடைத்தெழும் நரம்பை புலியேகீறும் வலியில்லையா ?

வெள்ளி வானம் மெல்ல உடைவதும்
மழையும் காற்றும் விலையாய் ஆனதும்
மழலையைர் உறுப்பை மர்மமாய் விற்பதும்
வாழ்தலின் அசிங்கமடா..,

இலையில் மறைத்தாய், துணியில் மறைத்தாய்
சாதியைப் பூசினாய், மதத்தை தடவினாய்
இனி மானத்தை எதைக் கொண்டு மறைப்பாய் ?

நீருக்கு அணைக் கட்டுவதும்
சோற்றிற்கு வரி போடுவதுமாய்
சொந்தமண்ணில் சோடையாகி நிற்கிறோமே (?)

காலில் விழுவதும்
கனவில் மிதப்பதும்
இலவசத்திற்கு மயங்கி எலியை புலியாக ஏற்கிறோமே (?)

படிப்பை விற்றதும்
மருந்தில் வியாதிகள் பிறந்ததும்
அரசியல் குப்பையானதும், எவரின் அறிவீனம் ? யாருடைய பலவீனம்?

விவசாயி உயிர் கொடுப்பதும்
நெசவாளி நாண்டுச் சாவதும்
பசிமூடிய அடுப்புகளெங்கும் இதயம் எரிவதும்
யானை கட்டிப் போராடித்த எம் மன்னன்
சோழனுக்கே இழுக்கில்லையா???

எப்படியோ இறந்தவர் இறந்தனர்
அறுபட்டக் கயிற்றிலும் தொங்கி முடிந்தனர்
அம்மணமாய்க் கூட திரிந்தனர்,

இனி மீத்தேன் கூட மூச்சுவிடும்..
அணுமின் நிலையங்கள் உயிரை அசைபோடும்..
நாற்காலிகள் இலவச நஞ்சுமிழும்..
மறுப்பதற்கில்லை -
வீட்டிற்கு இத்தனைப் பேர் இறந்துவிட்டார்களென
அதற்கும் அரசு பாய்ந்துவந்து
நம் மீதே வரியையும் ஏய்க்கலாம்,

அதனாலென்ன (?)!!

இதோ மீதமிருக்கும் பொழுதுகள் உன்னுடையவை
வா.. மீண்டும் நம் வாழ்வை
அங்கிருந்தே துவங்குவோம்; காடுகளிலிருந்து!!





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்