புலம் பெயர்வு
கவிஞர்
சா.சம்பத்து,பெருமாங்குப்பம்
உயிர்
அழிப்புக் களமாக-ஓர்
இனத்தின் வாழிடம்...!
உயிர் இருப்பை
உறுதி செய்யவே
ஓடுகிறார் புகலிடம்...!
நாறு மறுப்பதனால்
மாலையாகா மலர்கள் போல்
நாடு துறக்கும்
மக்கள் கூட்டம்...!
உலகம்
தொடரக் கூடாதப்
பயணம் இது...!
உள்ளம்
சுமக்க மறுக்கின்ற
சுமை இது...!
பொருள் நிறைந்த புன்னகையை
மக்கள்
மதத்தாலும் இனத்தாலும்
இழப்பது தான் இயற்கையா...?
இனவேரில்
விடம் தெளிக்க-வேற்று
மண் நாடும்
மியன்மார் மக்கள்...!
ஆதித் தமிழரோ...
அலைகடலின் வழிகாட்டலில்
அகிலமெலாம் அடைக்கலம்...!
தனி நாடாய் வாழ விரும்பியும்
வாழ வழி விடா
மன்னராட்சியின் பிடியில்
ஸ்பெயினின் காட்டலோனியா மக்கள்...!
வரலாற்றில்...
யூதர்களுக்குத்
தனி நாடாய் இசுரவேல்...!
அடைய விரும்பியதை
அடைந்தவராய்
அயர்லாந்து மக்கள்...!
உறவோடு உறவாக
இரை தேடும் பறவைகட்கும்
சுதந்திரமாய்த் தனி வீடு...!
தமிழர்க்கு...?
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்