வன்பகை
அற்ற வாழ்வு
கவிஞர் முருகேசு மயில்வாகனன்
வன்பகை
அற்றவாழ்வால் வன்மங்கள் தானகலும்
இன்பமே ஓங்கிநிற்கும் இல்லாளின் - அன்போங்கும்
நல்லோர் அரவணைப்பும் நாணயம் காப்பதனால்
எல்லோரும் போற்றி மகிழ்வர்.
வன்பகை அற்றிட்டால் வாழ்வு சுவர்க்கமே
தன்மானம் ஓங்கிநிற்கும் தாழ்வுநிலை - இன்மையால்
வாழ்வின் பிறப்பை வடிவமைத்தே இன்புறலாம்
காழ்ப்புணர்வு ஏது களிப்பு.
வன்பகையால் போர்மூளும் வாழ்விழப்பர் மக்களே
துன்பம் குடிகொள்ளத் தொல்லைகள் - தன்மானம்
அற்ற தலைவரின் ஐயமிக காழ்ப்புணர்வால்
குற்;;றம் இளைப்பரே காண்.
இன்பமாம் இவ்வுலகில் எத்தனையோ வாழ்முறைகள்
அன்பால் அரவணைத்தே ஆதரிக்கும் - நண்பர்கள்
துன்பம் வரும்போது துன்பகல நற்றுணையாய்
என்னாளும் நிற்பரே ஏற்று.
நல்லநண்பர் நட்பு நலிவின்றி நீண்டிருக்கும்
அல்லல் தருநண்பர் ஐயமின்றி – பொல்லாப்புத்
தந்;தே பெரும்பகை யாளனாகத் தீங்குசெய்தே
நிந்தைசெய் வாருமுண்டே நம்பு.
நல்ல மனைவி நமக்குக் கிடைத்திட்டால்
செல்வச் செழிப்பும் சிறப்பாக – நல்லதோர்
வாழ்வுடன் வன்பகை அற்ற வதிவிடமும்
தாழ்வின்றிச் சேர்ந்திடுமே தேர்.
உள்ளுணர்வின் தூண்டலே உண்மையான காதலாகும்
உள்ளத் துணர்வாலே ஊடுருவும் - கள்ளமற்ற
அன்பால் அரவணைத்தே ஆதரிக்கும் ஈருயிர்கள்
இன்பங்காண் நல்லுறவின் ஈர்ப்பு.
காதலுக்குச் சாதியில்லை கண்ணியம் அற்றவர்கள்
வேதனையால் மோதி வெறுப்படையும் - சாதிபார்க்கும்
பெற்றோரே வன்முறையாய்ப் பெற்றவரைக் கொல்லுகின்ற
அற்பர்கள் நேயமற்றோர் ஆம்
வன்முறையால் வாழ்வு வலிந்து கெடுவதுடன்
துன்பந்தான் மேலோங்கும் துற்புத்தி – அன்பிலா
இல்லாள் அரவணைப்பும் ஏற்றமுறு செய்தொழிலும்
ஏல்லாம் இழப்பேதான் ஏற்பு.
அன்புதான் இன்பவூற்று ஐயமின்றி ஏற்பீரே
இன்பஞசேர் இவ்வுலகில் எத்தனையோ – வன்முறைகள்
நாடாள் தலைவரின் நல்லறிவும் ஓங்கிநின்றால்
வாடாதே மக்கள் மனம்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்