தகுதி
உடைத்து தமிழ்
கவிஞர் இனியன்
பன்னெடுங் காலமாய்ப்
பார்க்கும் மொழிக்கெலாம்
முன்னிலை ஏற்றிட்ட மூத்தமொழி – தொன்மை
மிகுதி உளதாலே மேதினியில் மேலாம்
தகுதி உடைத்து தமிழ்.
தாழ்வினைத் தந்திடும் தன்வினை மற்றதோர்
ஊழ்வினைச் சார்ந்தும் உரைத்தது – வாழ்வை
வகுத்தும் பகுத்தும் விதிகள் சமைத்த
தகுதி உடைத்து தமிழ்.
கட்டுக் கடங்கா கணினி யுகத்திலே
எட்டிப் பரவிடும் எண்ணிலா – நுட்பம்
புகுத்தும் கணினிப் பொறியில் இயங்கும்
தகுதி உடைத்து தமிழ்.
சொல்லிடும் பன்மொழிச் சொற்கலப் பின்றிதான்
சொல்ல வருங்கால் சுவைபடச் - சொல்லத்
தகுமெனும் பாங்கில் தனித்தே இயங்கும்
தகுதி உடைத்து தமிழ்.
உலகப் பொதுமறை உட்கரு வாக
இலங்கும் பிறமொழி இல்லை – உலகின்
தகைசால் மொழிகளின் தாய்மொழி என்னும்
தகுதி உடைத்து தமிழ்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்