நல் ஆண்டு

கவிஞர் சா.சம்பத்து, பெருமாங்குப்பம்
 

ந்த ஆண்டிலாவது...

மண் ஊறும்
மழைத்துளி போல்
மக்கள் மனப் பரப்பில்-உண்மை
இடம் பிடிக்குமா...?

முற்று பெறா
மூன்றாம் பிறை வெளிச்சமாய்
கயமை கரையுமா...?

செங்குறுதியையும்
தசை நார்தனையும்
காணிக்கைக் கேட்காத
அரசியல் நடக்குமா...?

பண வெள்ளத்தால்
அணைந்து போகும்
கொள்கை தீபத்திற்கு
ஞாணயம் அணை போடுமா...?

உயிர் காக்கும்
மண் கலைஞர்களுக்கு
மிரட்டி வழங்கப்படும்
தற்கொலைப் பட்டம்
தடுத்து நிறுத்தப்படுமா...?

கடலையே தொழிற்களமாய்க்
கையாளும் வல்லவரின்
தொடர் துயர் துடைக்கப்படுமா...?

வறுமைக் கோட்டில்
எல்லைச் சுருக்கம்
ஏற்படுமா...?

மண்ணுக்கும் விண்ணுக்குமான
மறுசுழற்சி ஒப்பந்தம்
கசடற
காலத்தே நடக்குமா...?

கரும் புகையைக் காற்றும் -நச்சுக்
கழிவுகளைக் கடலும்
சுமக்கின்ற பாரம்
சற்றேனும் குறையுமா...?

இவற்றில் சிலவேனும்
இவ்வாண்டில் நடந்தால் தான்
இந்த ஆண்டை-ஒரு
நல்லாண்டாய் நான் கொள்வேன்...!
 



 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்