புத்தாண்டே நீ வருக !

எம்.ஜெயராமசர்மா,  அவுஸ்திரேலியா

புத்தாண்டே நீவருக
     புதுத்தெம்பை நீதருக
எத்திக்கும் நடக்கின்ற
     இடர்களைய நீவருக
சொத்துக்காய் சுகத்துக்காய்
     சூழ்ச்சிகளைச் செய்வாரின்
புத்தியினை மாற்றிவிட
     புத்தாண்டே நீவருக !

அரசியலில் குழப்பங்கள்
     அத்தனையும் அறவேண்டும்
ஆன்மீகம் மக்களது
     அகமதனில் அமரவேண்டும்
குறைபேசும் குணமெல்லாம்
     குழியதனுள் விழவேண்டும்
குவலயத்தில் அமைதிவர
     குதித்துவா புத்தாண்டே !

மழைவளம் பெருகவேண்டும்
    மாநிலமும் செழிக்கவேண்டும்
அழுகின்றார் வாழ்க்கையெலாம்
    ஆனந்தம் நிலைக்கவேண்டும்
வழுவின்றி நீதித்துறை
     வழங்கவேண்டும் நற்சேவை
பழுதகற்ற வந்திடுவாய்
     பாரினிலே புத்தாண்டே !

மூத்தோரை மதிக்கின்ற
     முழுமனது வரவேண்டும்
ஆத்திரத்தால் அழிவுசெய்யும்
    அரக்ககுணம் அகலவேண்டும்
சாத்திரத்தை சடங்குகளை
     சரியாகப் புரியவேண்டும்
சன்மார்க்கம் தனையுணர்த்த
     வந்திடுவாய் புத்தாண்டே !

ஆத்தீகம் பேசுவார்
    ஆண்டவனைப் போற்றட்டும்
நாத்தீகம் பேசுவார்
    நல்லவற்றை நினைக்கட்டும்
இல்லறமே நல்லறமாய்
    இலங்கட்டும் இவ்வுலகில்
நல்லதொரு புத்தாண்டாய்
    நலம்பயக்க வந்திடுக !
 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்