புத்தாண்டே வருக!

கவிஞர் முருகேசு மயில்வாகனன்

புத்தாண்டே வருக புதுமைகள் தருக!
சித்தங் கலங்கிச் சீரழியும் மக்களுக்காய்த்
தித்திக்க வந்திடுவாய் சிந்தை மகிழவே
வித்தகியே வீறுடன் விரைந்து வருக!
ஆண்டு இருபது பதினேழு அகல
ஆண்;டாள் இருபது பதினெட் டெம்முடன்
ஆண்டின் இறுதியில் அனர்த்தம் அதிகமே
பதினேழில் பட்ட பாடு போதுமே
வேதனை வேதனை ஆண்டு முழுவதும்
போட்டி பொறாமை பொல்லாங்கு எங்குமே
வஞ்சனை யாளரின் வலிமை ஓங்கிட
போதைப் பொருளின் பொலிவும் அஃதே
கொள்வனவு பாவனை கொள்வோரின் பொலிவு
இயற்கை அழிவால் ஈடில்லாத் துன்பம்
வீசுங் காற்றும் நீரின் பெருக்கும்
பூமி அதிர்வு பொல்லாக் காலநிலை
வலிமையைச் சோதிக்கும் வல்லரசு நாடுகள்
யுத்தத்தால் பாதிப்பு சூழ்நச் சாயுதங்கள்
போரினால் மக்கள் போக்கிடம் இன்மை
ஏதிலியென் றெங்கும் ஏற்றி இறக்குவோர்
இவ்வாறு கழிந்தது இருபது பதினேழு
பாங்காய் வருகின்ற பாசப் பதினெட்டோ
நத்தார் பின்வரும் நாயகியாம் நல்லவளை
வாழ்த்தி வரவேற்று மகிழ்ச்சி யடைவோம்
தாழ்வுற்ற மக்களைத் தரமு யர்த்திட
நாடு செழிக்க நல்லருள் காட்டுவாய்
வாடும் மக்களின் வாழ்வு உயர
மாடு மனைகள் மக்கள் வளம்பெற
ஊடுருவி வந்தே உயர வைப்பாய்
நல்வாழ் வளிக்க நல்வாய்ப் பளிப்பாய்
நள்ளிரவு பன்னிரண்டில் நாடொளிரத
ஆலய வாசலில் அலங்கார மிட்டே
பூரண கும்பம் பூசைகள் வைத்தே
ஆர வாரித் தரவ ணைப்போம்
வாழ்க வாழ்கவென வாழ்த்தி வரவேற்போம்.
 


 

 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்