கனடிய
மண்ணில் காணும் மரபுத் திங்களுக்காய் மகிழ்வொடு பூத்த
கும்மி
அருட்கவி ஞானகணேசன்
எங்கும்
இனிக்குது எங்கள் தமிழ்மொழி
ஏற்றியே பாடுவீர் எண்திசையும்
வங்கத் தமிழின்று வெள்ளையர் நாடெங்கும்
வாயில் ஒலிக்குதே எம்மவரால்
ஏருளு துண்பது எம்மரபு என்றும்
எளியோர்க் குதவுதல் எம்குணமே!
பாருல காளினும் பன்மொழி பேசினும்
பைந்தமிழ் காப்பதும் எம்கடனே!
பட்டம் பதவிகள் பற்பல கண்டுநாம்
பண்பொடு வாழ்வி லுயர்ந்திடுவோம்
எட்டுத் திசையிலும் எங்கள் தமிழ்மொழி
ஏற்றமாய் வாழ்ந்திட நாமுழைப்போம்
அண்டை அயலொடு அண்டிப் பழகியே
அன்போ டவர்மொழி கற்றிடுவோம்
பண்டைத் தமிழரின் பண்பா டுகலைகள்
பாரெலா மோங்கிடச் செய்திடுவோம்
நம்நாட்டின் உற்பத்தி நாளும் பெருக்கியே
நாடெலாம் வர்த்தகம் செய்திடுவோம்
எம்மண் பெருமைகள் எந்நாடும் பேசிட
என்றும்நாம் பண்பொடு வாழ்ந்திடுவோம்
இளைய தலைமுறை ஏற்றிடுவோம் எங்கும்
இணைந்து அரசிய லோச்சிடுவோம்
வளைய லணிந்திடும் வண்தமிழ்ப் பெண்களின்
வல்லமை போற்றி வியந்திடுவோம்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்