பொங்கல் ஹைக்கூ

கவிஞர் இனியன்
 

ரும்பு கசக்கிறது
உழவனுக்கு மட்டும்
விலை இல்லாததால்

தனலட்சுமி தங்கத்தாலி
தன்ராஜ் அடகுக்கடையில்
பொங்கல் செலவு.

மீன்கள் புரண்ட வயலில்
மீத்தேன் புரளுமாமே
நெடுவாசல்

நிலமென்னும் நல்லாள்
கற்பழிக்கப்பட்டாள்
ட்ராக்டரால்.

சோறு போட்ட நிலம்
கூறு போட்டாயிற்று
மனைகளாக.

பத்து ஏக்கர்காரர்
பார்க்கிறார் வேலை
பனியன் கம்பெனியில்.

கரும்பு விளைவித்தவர்
கரும்பு வாங்குகிறார்
ரேஷன் கடையில்!

தன்மானத் தமிழர்
தலைகீழாய் நிற்கிறார்
இலவச வேட்டி சேலைக்காக

குழாய்த் தண்ணீரில்
குளிக்கும் மாடுகள்
குளம் குட்டை மாயம்.

உழவன் வீட்டில்
உற்சாகப் பொங்கல்
இலவச டி.வி.யில்.

உழைத்தும்
உண்ணத் தெரியாதவன்
உழவன்.

வாங்கிய கடனுக்கு
வங்கியில் ஆவணம்
வாழும்வரை கோவணம்.

பூச்சி மருந்தால்
பூச்சிகள் சாவதில்லை
பாவம் உழவன்.

உழவன் செத்தால்
உழத்தி வாழ்வாள்
அரசு கருணைத் தொகையில்.

உழுபவன் குடிசையில்
உழுவிப்பவன்
உப்பரிகையில்.

இனிமேல்
ப்ளாஸ்டிக் அரிசியில்
பொங்கலோ பொங்கல்!
 


 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்