மாற்றத்தின் விளிம்பில்...

கவிஞர் சா.சம்பத்து, பெருமாங்குப்பம்
 

பொங்கல்

பொங்கி வழியுது
எண்ணத்தில்-ஆனால்
வற்றி விடுகிறது
நிஜத்தில்...!

ஆம்...

மிக நீண்ட தேடலின்
பெரு மூச்செடுப்பில்
உதிர்ந்த வார்த்தைகள் இவை...!

இந்தப் பொங்கலிலும்...

இனிக்கும்
மரபுச் செங்கரும்பு
எங்கும் காணவில்லை...!

கொப்பரை
வெல்லப் பாகு வாசம்
காற்றில் வீசவில்லை...!

அரிசிச் சக்கையாய்ச்
சோற்றுப் பருக்கை...!

இளம்
உப்புக் கரைசலாய்
இளநீர்ச் சுவை...!

வளம்
பொதிந்த மண்ணை
மாற்றியவை எவை...?

அவரை, கத்தரியில்-பழைய
ருசி இல்லை...!

பாலும் தயிரும்
நிறத்தில் தான் நிஜம்
பண்பில் குறைச்சல்...!

தோல் கனத்த தக்காளியில்
குறைச்சல் இல்லை வண்ணம்...!

உண்ணும் போது
தெரிவதில்லை
இனிப்பின் திண்ணம்...!

மரபு
மாற்றத்தின் விளிம்பில்...!

உறவு
பனை நிழல் துளியில்...!

இந்தப் பொங்கலிலும்...

அடையவேண்டிய
இலக்கு
எட்டி எட்டிச் செல்கிறது...!

துடைக்கப்பட வேண்டிய
இழுக்கு
அடர்த்தியாகிறது...!

இப்படித் தான்
இந்த ஆண்டிலும் தேடுகிறது
பழமைப் பொங்கலை
மனம்...!
 

 

 



 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்