பொங்கி மகிழ்ந்து புதுயுகம் காண்போம் 

அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன்

(கும்மி)

ங்கவூர்ப் பொங்கலில் எத்தனை இன்பங்கள்
       எண்ணிட நெஞ்சம் இனிக்கிறதே
எங்குதான் வாழ்ந்தாலும் அந்தமண் வாசனை
       இன்பம் தருகுது என்றுமப்பா!

முற்றி விழுந்த முழுத்தேங்காய் சேர்ப்போமே
       முன்னரே மண்பானை வாங்குவமே!
சுற்றுப் புறமெல்லாம் சுத்தமாய்க் கூட்டியே
       சுண்ணாம்பும் வீட்டிற்குப் பூசுவமே!

சுற்றியே மாவிலை தோரணம் கட்டியே
       சூரியன் கோலமும் போடுவமே
முற்றத்தின் மத்தியில் மூன்று அடுப்பும்
       மெழுகி அழகாகத் தேர்ற்றிடுமே!

மஞ்சளும் இஞ்சியும் மண்பானைக் களுத்தை
       மங்கல கரமாய் ஆக்கிடுமே
அஞ்சியே கொளுத்தும் ஆனை வெடிச்சத்தம்
      அண்டை அயலெலாம் கேட்டிடுமே!

பச்சை அரிசி பயறொடு சர்க்கரை
       பாலொடு நெய்சேர்த்துப் பொங்கிடுவோம்
இச்சையாய் நாங்கள் எழுந்து பாடியே
       ஈசனைப் பூப்போட்டுக் கும்பிடுவோம்

ஏரினைத் தாங்கியே என்று(ம்) உழுதிடும்
       எங்கள் எருதினைப் போற்றிடுவோம்
சூரியன் தோன்றிடச் சொந்தங்கள் கூடியே
       சூழ்ந்து வணங்கி மகிழ்ந்திடுவோம்.

நன்றி மறவாமை நம்மரபு என்றும்
       நலிந்தோர்க் குதவுதல் நம்கடனே
ஒன்றி யுலகெலா மோங்கியெம் ஓசை
       ஒலிக்க மகிழ்வொடு வாழ்த்திடுவோம்
 


 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்