புத்தம் சரணம் கச்சாமி

கவிஞர் முருகேசு மயில்வாகனன்



சித்தாத்தர் செய்தன் சீரான ஆட்சியை
நித்தம் வெறுத்தே நிராயுத பாணியாய்
சென்றதன் காரணத்தைச் செம்மொழியில் செப்புவமே
அரசனாய் ஆளுமை கொண்ட தந்த
இறைமை தவறாத இந்து மன்னன்
மக்கள் துயரை மாறு வேடத்தில்
திக்கெல்லாம் சென்றே செய்தி அறிந்தார்
இன்பமே வேண்டாம் இதுவே துன்பம்
மன்னர் பதவியை மாற்றிக் கொண்டார்
துறந்தார் அரசைத் துணைவியை விட்டார்
வெறுத்தே ஒதுக்கி வெறுங்கை யுடனே
அரண்மனை விட்டு ஆண்டி யாயே
துறவி யாகித் தூர தேசங்கள்
பற்றே அற்றுப் பாத யாத்திரை
சென்றே கலந்தார் செய்தி அறிந்தோர்
அன்பரை நாடி அடைந்தார் அவரடி
ஞானம் பிறந்தது நற்பண்பு சேர்ந்தது
சித்தம் அடங்கச் சீர்பெற் றாரே
புத்த ராகிப் புதுமைகள் செய்தார்
சீடர்கள் சேர்ந்தனர் சிறப்புப் பயிற்சிகள்
பற்பல கொடுத்தே பௌத்த ராக்கினார்
பஞ்ச சீலம் பற்றிய போதனை
புத்தம் சரணம் கச்சாமி மந்ரம்
போதனை மூலம் போற்றி வளர்த்தார்
பிறந்த நாட்டில் பெருமைகள் அறவே
ஈழ நாட்டில் இவரின் பெருமை
ஆழப் பதிந்தது அன்பு மலர்ந்தது
காலஞ் செல்லக் கயவர்கள் சேர்ந்தனர்
இனவாதம் ஓங்கிட ஈழஞ் சிதைந்தது
கோவில் இடிப்பு கொள்ளை அடிப்பு
மாதர் சேர்க்கை மதுப்பி ரயோகம்
காதல் லீலைகள் கற்பழிப்பு மற்றும்
துறவி உடையில் தூசணை செய்வதால்
பௌத்த தர்மம் பஞ்சாய்ப் பறக்கிறதே.
 



 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்