உலகையே வாசிக்கலாம்

கவிஞர் புகாரி

ன்னலோர இருக்கைகள்
பேருந்தின்
சாலையோரப் புத்தகங்கள்

மொட்டைமாடிப் படுக்கைகள்
ஆகாயத்தோடு
அலுக்காத பேச்சு வார்த்தைகள்

மரங்களின்
மந்திரக் குரல்களை
இலைகளின்
வண்ண வண்ண நாக்குகள்
வனமேடைகளில்
சலசலப்பாய் அரங்கேற்றுவதை
என்றேனும்
சிலுசிலுப்பாய் ரசித்தோமா

நதியில் இறங்குகையில்
நம் கால்களின் காதுகளில்
கிசுகிசுக்கும் கவிதைகளை
வேறு எங்கேனும்
சுகிக்க ஒல்லுமா

கடலின் கரைகளில்
நிலைமாறும் வாழ்க்கையின்
நித்தியத் தத்துவங்கள்
அத்தனையும்
ஈரமணல் எழுத்துக்களால்
பொழுதுக்கும் எழுதப்படுகின்றனவே
பார்த்தோமா படித்தோமா

கவிழ்ந்த விழிகளும்
குனிந்த தலையுமாய்
வெகுநேரம் கிடந்தால்
புத்தகங்கள்
நிறையவே வாசிக்கலாம்

ஆனால்
சற்றே உன் தலை
நிமிர்ந்தாலே போதும்
இந்த உலகையே வாசிக்கலாம்
 


 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்