மணிக்குயில் இசைக்குதடி

கவிஞர் வித்யாசாகர்

1
நீ விரிக்கும்
சிவப்புக் கம்பளப் பார்வையின்மீது நான்
மகிழ்வோடு நடக்கிறேன்,
அங்கேமலர்வதெல்லாம்
கவிதையாகிறது,

உண்மையில் அவைகளெல்லாம்
உன் மீதான
அன்பு மட்டுமே யென் மழைப்பெண்ணே!
------------

2
இப்போதெல்லாம்
நீ நடக்கும் தெருவழியில்கூடநான்
அதிகம் வருவதில்லை,

காரணம்
என்னை நீ நினைப்பதில்கூட
உனக்கு
வலித்துவிட கூடாது!
---------------

3
எனக்குள் ஒரு
தவமிருக்கிறது,
நீ அழுது கண்ட நாளிலிருந்து
துவங்கிய தவமது,

'இன்னொருமுறை நீ
அழுது கண்டால் அங்கே நான்
இறக்கும் வரம் கேட்டு' தவமது!
----------------

4
உனக்கு
கனவுகளை கொடுத்துவிடக்
கூடாதென
அத்தனை கவனமெனக்கு,

நானென் காதலுக்குள்
கனவுகளைச் சேகரிப்பதேயில்லை
உனக்கான அன்பைத் தவிர!
-----------------

5
கண்களுளென்ன
விளக்குகள்
வைத்திருக்கிறாயா?

எத்தனை பிரகாசமந்தப்
பார்வையில்!
-------------------

6
எனக்கானச்
சொற்களை
நீயே எடுத்துக் கொள்கிறாய்;

நான் எழுதுவதற்கு
நீ மட்டுமே இருக்கிறாய்,
மனசாக!
-----------------

7
இதோ
நீ வந்துபோன
அதே இடத்தில்தான்
நானும் வந்துநிற்கிறேன்,

உன்போல்
மழையல்ல நான் வானம்!!
------------------

8
தீக்குச்சி போல்
உரசுகிறாய்
வெளிச்சமெழுகிறது,

சுடவில்லை நீ..
----------------

9
என்றோ
தொலைத்த என்
கவிதையை
மீண்டுமெடுத்து வாசிக்கிறேன்,

அது
வசியமாகிறது!
---------------------

10
உனக்காகக்
காத்திருக்கும்
நொடிகள் மகத்தானவை,

உண்மையில்
மகத்தான வாழ்க்கை தான்
எனது!
----------------------

11
உனக்கும்
எனக்கும்
கடல் ஒன்றுதான்,

எனக்கு நீ பெண்ணலை
உனக்கு நான் ஆணலை!

மாறி மாறி நாம்
முத்தமிடும் கரையும் ஒன்றுதான்,

உனக்கது என் நினைவு
எனக்கது உன் நினைவு!

நஞ்சு போல நம்மை
கொல்லும் உப்பும் ஒன்று தான்,

நீயென்னை விரும்பியதும்
நானுன்னை விரும்புவதும்!
------------------
12
திரைப்படத்தில் வரும்
நாயகிகளும்
அழகுதான்,

ஆனால்
உன்னைப்போல் அவர்களிடத்தில்
காதலில்லை யெனக்கு;

எனவே நீயே பேரழகு!!
 




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்