உயிர்ப்பு
(அறுசீர் விருத்தம்)
கவிஞர் மாவிலி மைந்தன்
சி.சண்முகராஜா, கனடா
வெட்டியாய்
இருக்கும் காற்று
வீசியே உயிரைக் காட்டும்
கொட்டுமோர் மழையாய் வந்தே
குளிர்முகில் நிலத்தைக் காக்கும்
மொட்டென இருக்கும் பூவும்
மலரவே மணத்தை வீசும்
கட்டியாய் இருக்கும் தங்கம்
கனல்பட அணியாய் மாறும்
மீட்டினால் தானே காதில்
வீணையும் இசையை வார்க்கும்
காட்டினால் தானே அன்பும்
கனிவொடு மனத்தை ஈர்க்கும்
ஈட்டிய பொருளில் ஏழைக்(கு)
ஈவதே இன்ப மூட்டும்
தீட்டிய அறிவே எட்டுத்
திசையையும் தெரியக் காட்டும்.
கூடியே வாழ்ந்தால் சொந்தம்
குலவியே களிக்கும் என்றும்
தேடியே போனால் தெய்வம்
தெளிவுடன் நெஞ்சில் தோன்றும்
ஓடியே நதியும் சென்று
உலகுக்கு வளத்தைச் சேர்க்கும்
மூடியைத் திறந்தே உள்ளம்
முகத்திரை விலக்கிக் காட்டும்.
காசுக்கும் கஞ்சிக் கென்றும்
கற்கிறோம் மொழிகள் வேறு,
தூசுபோல் தமிழை எண்ணித்
தூற்றுதல் முறையோ கூறு!
பேசுவோம் தமிழை நாளும்
பேசவே தமிழும் வாழும்
பேசுந்தாய் மொழிவாழ்ந் தாலே
பெயருடன் நாமும் வாழ்வோம்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்