என்றுதான்
சுதந்திரம்?
கவிஞர் மாவிலி மைந்தன், கனடா
சுதந்திர
நாட்க ளென்றும்
சுகராகம் கேட்ட தில்லைச்
சுதந்திரக் காற்று எங்கள்
சோலையில் வீச வில்லைச்
சுதந்திரம் பேரி னத்தின்
சொத்தென ஆன தாலே
சுதந்திர அடிமை என்னும்
சொற்பதம் நாங்க ளானோம்!
முன்னைபல் லாண்டாய் எங்கள்
மூதாதை யோர்கள் வாழ்ந்த
இன்னரும் நிலமும் போற்றும்
இனியநற் றமிழும் வாழ்வும்
அன்னியர்க் கடிமை யான
அன்றும்நாம் இழந்த தில்லை!
இன்னைநாள் சுதந்தி ரத்தால்
இழந்தவைக் கெல்லை யில்லை!
சொந்தமண் ணுரிமை தன்னைச்
சொத்தான இனத்தை வாழ்வாம்
செந்தமிழ் மொழியைக் கல்விச்
சிறப்பினைக் கலைபண் பாட்டை
அந்தமாய்த் திகழும் எங்கள்
ஆன்மீக நெறியை யெல்லாம்
வந்தவர் அழித்து வீழ்த்த
வைத்ததிச் சுதந்தி ரம்தான்!
எழுபது ஆண்டு காலம்
எய்திய நன்மை யென்ன?
விழுந்தன உயிர்கள் கோடி
விடுதலை வாழ்வைத் தேடித்
தொழுதுகை யேந்தும் வாழ்வைத்
தொலைத்தென்று நம்மை நாமே
முழுவதும் ஆளும் நாளே
முடியுமெம் அடிமை வாழ்வே!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்